பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள
அறிக்கை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி
மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) தமிழகத்திற்கு விலக்கு அளிக்க
முடியாது என்றும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத
வேண்டியது கட்டாயம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா
கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என
எதிர்பார்த்த நிலையில் இது ஏமாற்றமளிக்கிறது.
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வான நீட்டிலிருந்து எந்த
மாநிலத்திற்கும் விலக்களிக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவாகக்
கூறிவிட்டதாகவும், அதைப் பொருட்படுத்தாமல் தமிழக அரசு சட்டம் இயற்றி
அதற்கான ஒப்புதலுக்காக காத்துக்கிடந்ததால் ஏற்பட்ட தாமதத்திற்கு மத்திய
அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சென்னை
விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத் திருத்தம் தமிழக
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், இந்தத் தேர்விலிருந்து விலக்கு
கிடைத்து விடும்; அதனால் 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்
அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர்ந்து விடலாம் என்று நம்பிய
மாணவர்களின் இதயத்தில் இந்த அறிவிப்பு இடியை இறக்கியுள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக
அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான சட்டத்திருத்த மசோதா கடந்த
பிப்ரவரி 2&ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் இன்றுவரை 73 நாட்களாகி விட்ட நிலையில் தமிழக சட்டத்திற்கு
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமாக
எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசின் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளன்றே, ''தமிழக அரசின் சட்டத்திற்கு
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற கடந்த காலங்களில் பல மாதங்கள்
ஆகியிருக்கின்றன. இப்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டால், தமிழக மாணவர்களின்
மருத்துவப் படிப்புக் கனவு அழிந்து விடும். அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு
சட்டத்துக்கு தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவசர
சட்டத்துக்கு ஒரு நாளிலும், நிரந்தர சட்டத்துக்கு ஒரு வாரத்திலும் ஒப்புதல்
வாங்கியதைப் போல, நீட் சட்டத்துக்கும் மத்திய அரசின் ஒப்புதலையும்,
குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற முடியும். இந்த விஷயத்தில் அதுபோன்று
அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெறுவது சாத்தியமில்லை என்றால் அதை தமிழக அரசு
வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிடக்
கூடாது'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார்.
தமிழக அரசின் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் குறித்து பேச்சு
நடத்துவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரு முறை தில்லி சென்று
வந்தார். ஆனால், அவரது முயற்சிகளால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அப்போதாவது உண்மை நிலையை மாணவர்களிடம் தமிழக அரசு விளக்கியிருக்க வேண்டும்.
ஆனால், அதையும் செய்யாமல் மாணவர்களை அரசு ஏமாற்றி விட்டது.
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியாவில் பொது நுழைவுத் தேர்வு என்பதே ஏற்க
முடியாத ஒன்றாகும். பெருநகரங்களில் கிடைக்கும் கல்விக்கும்,
குக்கிராமங்களின் பள்ளிகளில் வழங்கப்படும் கல்விக்கும் இடையிலான
வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்துக்கு
சமமானதாகும். இவ்வாறு இருவேறுபட்ட கல்வி பயிலும் மாணவர்களை ஒன்றாக கருதுவது
சமூகநீதிக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
இதை மத்திய அரசு உணராதது பெரும் வேதனையளிக்கிறது. தமிழகத்தில்
பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் நுழைவுத் தேர்வுகள் ரத்து
செய்யப்பட்ட பிறகு தான் ஊரக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் அதிக
எண்ணிக்கையில் சேருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஊரக மாணவர்களில்
மருத்துவப் படிப்பு வாய்ப்பு பறிக்கப்பட்டால், அதன்பின் கிராமப்புறங்களில்
இருந்து மருத்துவர்கள் உருவாவது குறைந்து, ஊரக மக்களுக்கான மருத்துவ
வசதிகளும் குறைந்து விடும். இது சமூகத்தில் மிக மோசமான விளைவுகளை
ஏற்படுத்தும் என்பதை அரசு உணர வேண்டும்.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு
தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அமைச்சர் நட்டா கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே கிராமப்புற ஒதுக்கீடு
கொண்டு வரப்பட்ட நிலையில், அதை நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில்,
மீண்டும் அதேபோன்றதொரு ஏற்பாட்டை செய்வது பயனளிக்காது. இப்போதைய நிலையில்
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதன் மூலமே ஊரக மாணவர்களின் நலனைக் காக்க
முடியும்.
தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்ட நிலையில், இனி
ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டும் தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற
முடியும். அதேநேரத்தில் தமிழகம் நினைத்தால் அது சாத்தியம் தான். தமிழக
அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து தீர்மானம்
இயற்றி அதை அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் தில்லி சென்று பிரதமரிடம்
முதலமைச்சர் நேரில் வழங்குவதுடன், அங்கேயே சில நாட்கள் தங்கி அழுத்தம்
கொடுத்தால் மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது சாத்தியம் தான். எனவே இனியும்
அலட்சியம் காட்டாமல் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள
வேண்டும்; அதன்மூலம் மாணவர் நலனைக் காக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி
ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment