சுவாதி கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியை பிடிக்க முடியாத நிலையில், 
என் மகனை போலீசார் திட்டம் போட்டு சிறைக்குள்ளேயே கொன்று விட்டனர் என 
ராம்குமாரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக 
வெட்டிக் கொள்ளப்பட்டார் பொறியாளர் சுவாதி. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில்
 நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைப் போலீசார் கைது செய்து 
சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் 
ராம்குமார். தற்போது அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 
வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராம்குமார் மரணம் குறித்து தகவல் அறிந்து அவரது குடும்பத்தார் 
சோகத்தில் மூழ்கினர். தங்களது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர்கள் 
குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறுகையில், "சுவாதி 
கொலையில் என் நிரபராதி என நாங்கள் கோர்ட்டில் நிரூபிக்க முயற்சி செய்து 
வந்தோம். இன்று சென்னை கோர்ட்டில் வக்கீல் மூலம் அவனை ஜாமீனில் எடுக்க 
முயற்சி செய்து வந்தோம். இந்நிலையில் எனது மகன் ராம்குமாருக்கு சுகர் 
காரணமாக வயிற்று போக்கு ஏற்பட்டதால் புழல் சிறையில் இருந்து ராயப்போட்டை 
மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக மாலை 4.45 மணிக்கு சிறையில் இருந்து போன்
 செய்தனர். சிறையில் சுகவீனம் அடைந்தவர்களை மரு்த்துவமனைக்கு கொண்டு 
சென்றால் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பார்கள் என்றும் சொன்னார்கள்.
தொடக்கத்திலிருந்தே எனது மகனை கொல்ல போலீசார் முயன்றனர். அவனை 
பிடிக்க வந்த போலீசார் வீட்டின் பின்னால் கூட்டி போய் கழுத்தை அறுத்து 
கொல்ல முயன்றனர். அதே போல் சிறையிலும் கொல்ல முயற்சி செய்துள்ளனர். 
அதன்படியே கொன்று விட்டனர்.
சுவாதியை கொன்ற உண்மையான குற்றவாளியை பிடிக்க முயலாத அவர்கள் இப்போது 
திட்டமிட்டு எனது மகனை கொன்று விட்டு தற்கொலை செய்தான் என பொய் 
சொல்கின்றனர். எனது மகன் சாவுக்கு அரசு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.
 உண்மை தெரியும் வரை நாங்கள் சென்னைக்கு செல்ல மாட்டோம். அவனது உடலையும் 
வாங்க மாட்டோம். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" 
என்றார்.
இதற்கிடையே, ராம்குமாரின் தாய் தலைமையில் தென்காசி-செங்கோட்டை 
-பண்பொழி விலக்கில் திடீர் சாலைமறியலில் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ 
இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்கரமான் 
உத்தரவுப்படி தென்காசி கோட்ட ஆட்சியர்வெங்கடேஷ், நெல்லை மாவட்ட கூடுதல் 
காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் 
மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 அதனைத் தொடர்ந்து ராம்குமாரின் தாயார் மற்றும் உறவினர்கள் சாலை மறியலை 
கைவிட்டு களைந்து சென்றனர்.
இதற்கிடையே, ராம்குமார் வக்கீல் ராமராஜ் இதுகுறித்து கூறும்போது, "தற்கொலை
 செய்து கொள்ளும் அளவுக்கு ராம்குமார் கோழை அல்ல. அவரிடம் நான் 17ஆம் தேதி
 காலை கூட சுமார் ஓரு மணி நேரம் பேசினேன். அப்போது அவர் தெளிவான மனநிலையில்
 தான் இருந்தார். எனவே இது தற்கொலை அல்ல.கொலை. சிறையில் உள்ள அவர் போலீஸ்
 பாதுகாப்பில் உள்ளார். தற்கொலை செய்ய காரணம் இல்லாத போது இது அப்பட்டமான 
கொலை. அனைவரும் சேர்ந்து ராம்குமாரை கொலை செய்து விட்டனர். இதற்கு 
சிறைத்துறைதான் பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றார்.



No comments:
Post a Comment