நெல்லை அருகே இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் வெடித்ததில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. கலவரம் எதுவும் நடக்காமல் இருக்க அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லிடைக்குறிச்சி அருகே உள்ளது நெசவாளர் காலனி. கடந்த சில வாரங்களுக்கு முன், மீனவர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், நெசவாளர் காலனி வழியாக பைக்கில் வேகமாக சென்றனர். அப்போது, அங்கிருந்த ஒருவர் ஏன் இவ்வளவு வேகமாக செல்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகராறு குறித்த புகார் ஒன்று கல்லிடைக்குறிச்சி போலீசாரிடம் கொடுக்கப்பட்டது. விசாரணையை முடித்த பின்னர் போலீசார் அறிக்கை ஒன்றை தயாரித்து சேரன்மாதேவி சப் கலெக்டரிடம் சமர்பித்துள்ளனர். இந்நிலையில், மீனவர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் இரண்டு பைக்குளில் அதே நெசவாளர் காலனி வழியாக படுவேகமாக மீண்டும் சென்றுள்ளனர். அப்போது, அந்த வழியில் நின்று கொண்டிருந்த பூல்குமார் என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 7 பேரும் பைக்கை ஓரமாக நிறுத்தி இறங்கி வந்தனர். பின்னர் இறங்கிய வேகத்தில் பூல்குமாரை அரிவாளால் வெட்டினர். 7 பேரின் வெட்டை சமாளிக்கும் வகையில் பூல்குமாரும் அங்கிருந்த மற்றொருவரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, மீனவர்கள் காலனியை சேர்ந்த இளைஞர் மாரிகுமாருக்கு அரிவாள் வெட்டி விழுந்தது. மோதலில் காயம் அடைந்த மாரிகுமாரும் பூல்குமாரும் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சபிபுல்லா விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், பூல்குமார் கொடுத்த புகாரின் பேரில் மீனவர் காலனியை சேர்ந்த மகாராஜன், இசக்கிமுத்து, சிவா, சுரேஷ், அந்தோணி, மயில்ராமன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருதரப்பினரிடையே நடந்துள்ள இந்த மோதலால் நெல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment