தமிழ் நாட்டின் காவல்துறை இயக்குநராக - டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், டிஜிபி - இருந்த அஷோக் குமார் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார். ஏற்கனவே 2015 ஜூனில் பதவி ஓய்வு பெற வேண்டியிருந்த அஷோக் குமார், உச்ச நீதிமன்றம் வழங்கிய பிரகாஷ் சிங் தீர்ப்பின் காரணமாக இரண்டாண்டுகள் டிஜிபி யாக பதவி உத்திரவாதம் பெற்றிருந்தார். ஒரு மாநிலத்தின் டிஜிபி யாக பதவி வகிப்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் அந்த பதவியை வகிக்க வேண்டும் என்பதுதான் பிரகாஷ் சிங் தீர்ப்பின் சாராம்சமாகும். அதன்படி, நவம்பர், 2014 ல் டிஜிபி யாக பதவியேற்ற அஷோக் குமார், பதவிக் காலம் இன்னமும் இரண்டு மாதங்கள் இருக்கையிலேயே திடீரென்று விருப்ப ஓய்வில் (விஆர்எஸ்) போவதாக அரசுக்கு கடிதம் எழுதி விட்டார். அஷோக் குமாரின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரை, செப்டம்பர் 6 ம் தேதி மதியம் பதவியிலிருந்தும் விடுவித்துவிட்டதாக, புதன்கிழமை மதியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. புதிய டிஜிபி யாக (கூடுதல் பொறுப்பு),சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே. ராஜேந்திரன் நியமிக்கப் பட்டுவிட்டார். இதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உளவுத்துறையின் முழு நேர டிஜிபியாக ராஜேந்திரன் நியமிக்கப் பட்டிருக்கிறார். இப்போதும் முழு நேர டிஜிபியாக அவர் நியமிக்கப் படவில்லை. சட்டம், ஒழுங்கு டிஜிபி என்று கூடுதல் பொறுப்பு தான் ராஜேந்திரனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ல் ஜெயலலிதா மூன்றாவது முறையாக பதவியேற்ற போது டிஜிபி யாக நியமிக்கப்பட்டவர் கே.ராமானுஜம். அதுவும் அவர் உளவுத்துறை முழுநேர டிஜிபியாகவும், சட்டம், ஒழங்கை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் டிஜிபியாகவும் நியமிக்கப் பட்டார். இது வழக்கத்தில் இல்லாத, அபத்தமான ஒன்றாக பார்க்கப்பட்டது. காரணம் உளவுத்துறையும், சட்டம், ஒழுங்கும் காவல்துறைக்குள் எதிரும், புதிருமான அமைப்புகள். சட்டம், ஒழுங்கில் நிலவும் தவறுகளை முதலமைச்சரிடம் சுட்டிக் காட்டித் திருத்துவதுதான் உளவுத்துறையின் பணி. இன்னும் சொல்லப் போனால் உளவுத்துறை டிஜிபி யாக பணியாற்றியவர்களைப் பார்த்து சட்டம், ஒழுங்கு டிஜிபி மட்டுமல்ல தலைமைச் செயலாளர்களே எச்சரிக்கையுடன் உஷாராக நடந்து கொள்ளுவார்கள். உதாரணத்திற்கு, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை டிஜிபி யாக இருந்து கே.மோகன்தாஸ் மற்றும் சமீபத்தில் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜாஃபர் சேட் ஆகிய அதிகாரிகளைச் சொல்லலாம்.
ஆனால் இதை விட அவலம் பணி ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ராமானுஜத்தை டிஜிபியாக தமிழக அரசு நியமித்த விவகாரம். பிரகாஷ் சிங் தீர்ப்பின் சாராம்சம், எந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகள் வரையில் பதவியில் இருப்பதற்கான காலம் இருக்கிறதோ அவரைத் தான் டிஜிபி யாக நியமிக்க வேண்டும் என்பது. ஆனால் ஓய்வு பெறுவதற்கு சில நாட்களே உள்ள ஒருவரை டிஜிபி யாக நியமித்து அவருக்கு இரண்டாண்டுகள் பதவியை உறுதி செய்தது பிரகாஷ் சிங் தீர்ப்பின் சாராம்சத்தையே கேலி செய்ததாக மாறிப் போனது. இது பல அதிகாரிகளின் புரமோஷனை பாதித்து விட்டது. "பிரகாஷ் சிங் தீர்ப்பை தமிழக அரசு தவறாக பயன்படுத்தியதன் விளைவு இன்று தமிழகத்தில் ராமானுஜம் டிஜிபி யாக நியமிக்கப்பட்ட காரணத்தால் 14 ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு பாதிக்கப் பட்டு விட்டது. இதில் டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி அந்தஸ்திலான அதிகாரிகள் அடக்கம்," என்று கூறுகிறார் பாதிக்கப்பட்ட ஏடிஜிபி ஒருவர்.
உளவுத்துறைக்கு முழு நேர டிஜிபியாக நியமிக்கப் பட்ட ராமானுஜம், அவர் ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சட்டம், ஒழுங்கு ரெகுலர் டிஜிபி யாக 2012 ல் நியமிக்கப் பட்டார். 2014 அக்டோபரில் ல் ராமானுஜம் ஓய்வு பெற்றார். ராமானுஜத்தின் நியமனத்தை மத்திய அரசு கடைசி வரையில் அங்கீகரிக்கவில்லை என்கின்றனர் தமிழக அரசின் காவல் துறை உயர் வட்டாரங்கள். நவம்பர் 2014 ல் நியமிக்கப் பட்ட அஷோக் குமாரின் நியமனத்தையும் மத்திய அரசு அங்கீகரிக்க வில்லை. காரணம் டிஜிபி நியமனங்களில் மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டியவை என்று பிரகாஷ் சிங் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட எதையும் தமிழக அரசு கடைபிடிக்காததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
பிரகாஷ் சிங் தீர்ப்பின் சாராம்சத்தை தமிழக அரசு திரித்து, சிதைத்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசு நிர்வாகத்தை பற்றி அறிந்தவர்கள். "உச்ச நீதி மன்றத்தின் வழி காட்டுதல்களை தமிழக அரசு திரிப்பது 2009 ம் ஆண்டு வாக்கில் லத்திகா சரண் டிஜிபி யாக நியமிக்கப் பட்ட காலத்திலேயே துவங்கி விட்டது. அது திமுக ஆட்சிக் காலம். இப்போது விவகாரம் வேறு பரிமாணங்களில் நடக்கத் துவங்கியிருக்கிறது. அஷோக் குமார் நல்ல அதிகாரி. அவர் மீது எந்த ஊழல் குற்றச் சாட்டும் கிடையாது. இன்னும் இரண்டு மாதங்களே அவருக்கு ஓய்வு பெறுவதற்கு இருக்கும் நிலையில் அவர் பதவி விலகியிருக்கிறார். இதற்கு என்ன காரணம், என்ன நடந்தது என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. தமிழக அரசு நிருவாகத்தில் புரையோடிப் போன அவலங்களின் ஓரங்கமாகத் தான் இதனையும் பார்க்க வேண்டியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தலைமைச் செயலாளர் உட்பட, 2 ஐஏஎஸ் அதிகாரிகளும் மற்றும் 4 உயரதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கின்றனர். காரணம் எதுவும் சொல்லப் படவில்லை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்வதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஆனால் இங்கு சர்வசாதரணமாக அவையெல்லாம் நடக்கின்றன," என்கிறார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி. தேவசகாயம்.
ரெகுலர் டிஜிபி யாக ராஜேந்திரனை நியமிப்பது அவ்வளவு சுலபமானதல்ல என்கின்றனர் விவரமறிந்தவர்கள். "மொத்தம் ஐந்து டிஜிபி க்கள் உள்ளனர் தமிழகத்தில். சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், அர்ச்சனா ராமசுந்தரம், கே.ராதாகிருஷ்ணன், கே.பி. மகேந்திரன், எஸ்.ஜார்ஜ், மற்றும் கடைசியாகத்தான் ராஜேந்திரன் வருகிறார். பிரகாஷ் சிங் தீர்ப்பின்படி சீனியாரிட்டி அடிப்படையில் முதல் மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த பிறகுதான் அந்த மூவரிலிருந்துதான் ஒருவரை ரெகுலர் டிஜிபி யாக நியமிக்க முடியும். மற்ற நால்வரையும் டிஜிபி யாக்க தமிழக அரசு விரும்பாத காரணத்தால்தான் ராஜேந்திரனை பொறுப்பு டிஜிபி யாக தமிழக அரசு நியமித்து உள்ளது. இனி வரும் மாதங்களில் மற்ற நால்வரில் இருவர் ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்ப படும். ஆகவே மத்திய அரசின் முறையான ஒப்புதல் இல்லாத ஒருவர் தமிழகத்தின் டிஜிபி யாக பணியாற்றுவது மீண்டும் தொடர் கதையாகப் போகிறது," என்கிறார் பெயர் கூற விரும்பாத ஏடிஜிபி ஒருவர்.
இதில் வேதனையான விஷயம் இத்தகைய நியமனங்களை எதிர்த்து அவ்வளவு சுலபத்தில் நீதிமன்றங்களுக்கு யாரும் போய் விட முடியாது என்பதுதான். காரணம் இவை அரசு அதிகாரிகளின் நியமனங்கள் என்ற பட்டியலில், அதாவது, service matters என்ற அடிப்படையில் வருகின்றன. சம்மந்தபட்ட பாதிக்கப்பட்ட ஒருவர்தான் நீதிமன்றத்துக்குப் போக முடியும். உதாரணத்துக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அரச்சனா ராமசுந்தரம், இது தொடர்பாக, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு central administrative tribunal or CAT போகலாம். அதே போன்று மற்ற மூவரும் கூட போகலாம். ஆனாலும் தமிழகத்தின் தற்போதய அரசியல் சூழலில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்துக்குப் போகும் துணிச்சல் எந்த அதிகாரிக்கும் வராது. மற்ற விவகாரங்களில் உள்ளது போன்று பொது நல வழக்குகளை இதில் நாம் போட முடியாது என்பதுதான் உண்மை.
ஆனாலும் ராமானுஜம் டிஜிபி யாக நியமிக்கப் பட்ட போது, ஒரு வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அந்த நியமனத்தை எதிர்த்து பொது நல வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். இது service matter என்று கூறி சென்னை உயர்நீதி மன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. பின்னர் அந்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், பிரகாஷ் சிங் தீர்ப்பின் உத்திரவுகள் பின்பற்றப் படவில்லை என்று கூறி மேல் முறையீடு செய்தார். அந்தக் குறிப்பிட்ட காரணத்தால், அதாவது பிரகாஷ் சிங் தீர்ப்பின் உத்திரவுகள் பின்பற்றப் படவில்லை என்பதால், அதாவது, உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டு நெறிகள், உத்திரவுகள் பின்பற்றப் படாத காரணத்தால், அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்திருக்கிறது. ஆனால் வழக்கு விசாரணையில் எந்த மேல் முன்னேற்றமும் இல்லை.
ஆகவே இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றங்களை நாடி பிரயோசனம் இல்லை என்பதுதான் உண்மை. தங்களுக்கு நியாயமாக வர வேண்டிய பதவி உயர்வுகள் வராதவர்கள், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளே வாய் மூடி, மெளனியாய், பம்மிக் கிடக்கையில் திருவாளர் பொது ஜனத்தை பற்றி சொல்லுவதற்கு என்ன இருக்கிறது. லத்திகா சரண் திமுக ஆட்சிக் காலத்தில் பிரகாஷ் சிங் தீர்ப்பினைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட போது, அதனை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி ஆர்.நடராஜ் தீர்ப்பாயத்துக்கும், உயர்நீதி மன்றத்துக்கும் போனார். ஆனால் அந்த துணிச்சல் இன்று மற்றவர்களுக்கு இல்லையென்பதுதான் யதார்த்தம். தமிழக அரசின் இந்தப் போக்கு காவல் துறையில், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் எல்லா நிலைகளிலும் மனச் சோர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அதிகார கட்டமைப்பின் தன்மையை அறிந்தவர்கள். காவல் துறைக்கான அமைச்சர் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் ஜெயலலிதாதான். ஆகவே இந்த நிர்வாக சீரழிவுக்கு யார் காரணம் என்பதை அறிய ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாய் இருக்க வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை!


No comments:
Post a Comment