கயத்தார் அருகே கடந்த 3-ந் தேதி காணாமல் போன சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவை சேர்ந்த தம்பதியர் பூல்பாண்டிக்கும் அவரது மனைவி ஆனந்திக்கும் காமினி ஸ்ரீ என்ற மகள் உள்ளார். தம்பதியர் இருவரும் கடந்த 3ம் தேதி வழக்கம் போல் காமினியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
சிறுமியும் தனது பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ளார். மதியம் 12 மணிக்கு பாட்டி வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த காமினி ஸ்ரீ திடீரென காணாமல் போய்விட்டார். பெற்றோர்கள் பக்கத்து வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் தந்தை பூல்பாண்டி கயத்தார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதி்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஊருக்கு ஒதுக்குபுறமாக சொக்கையை கோயிலுக்கு அருகே நல்லசிவம் என்பவரது தோட்டம் ஒன்று உள்ளது. அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சிறுமியின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. 50 அடி ஆழம் உள்ள இந்தக் கிணற்றில் 7 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.
உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து சிறுமியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டெடுத்தனர். அப்போது சிறுமியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. சிறுமியை யாராவது கொலை செய்துவிட்டு பின்னர் கிணற்றில் வீசியுள்ளனரா அல்லது சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்து இறந்துவிட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மீட்கப்பட்ட உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் இறப்பு குறித்து சரியான தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment