Latest News

மனிதாபிமானம் ஓர் இபாதத்


ஸூரா மாஊனின் நிழலில் – மனிதாபிமானம் ஓர் இபாதத்
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். அறபாத் கரீம் (நிகழ்த்திய மார்க்கச் சொற்பொழிவின் சுருக்கம்.)

‘மனிதாபிமானம் ஓர் இபாதத்’ ஸூரா மாஊனின் சிந்தனைப் பரிமாறல் என்ற தலைப்பில் இன்று நாம் உரையாட இருக்கின்றோம்.

அன்பான சகோதரர்களே… மக்காவிலும் மதீனாவிலும் இறங்கிய இந்த ஸூரதுல் மாஊன் பல பின்னணிகளை நமக்கு வலியுறுத்துகின்றது; மனித சமூகத்திலே இருக்கின்ற பல பிழையான கருத்துக்களை சரி செய்ய அது முயற்சிக்கின்றது.

மறுமை பற்றிய நம்பிக்கை

ஒரு சமூகத்திலே பலசாலிகள் இருப்பது போன்று பலவீனர்களும் இருப்பார்கள். அங்கே முதலாளிகள் இருப்பார்கள். பணக்காரர்கள் இருப்பார்கள். பெரும் அரசியல்வாதிகள் இருப்பார்கள். மறுபக்கத்தால் பலவீனர்கள், அநாதைகள், ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள், ஸாகத் பெறத் தகுதியானவர்கள், நோயாளிகள்… என்ற இன்னொரு கூட்டமும் இருப்பார்கள். இவை இரண்டும் சேர்ந்தவைதான் மனித சமூகம்.

இந்த மனித சமூகத்திலே மறுமை பற்றிய நம்பிக்கையில் பலவீனம் இருப்பதன் காரணமாக நம்முடைய வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் ஒரு பலவீன நிலை காணப்படுகின்றது. உலகத்தில் பாவங்கள் பெருக்கெடுத்து வளர்வதற்கும், மனிதாபிமான பண்பாடுகள் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கும் இந்த மறுமை பற்றிய பலவீனமே காரணமாக இருக்கிறது என அல்லாஹுத்தஆலா இந்த ஸூரா மாஊனின் ஆயத்துகளின் மூலமாக படிப்பினை கற்பிக்கின்றான்.

அநாதையை ஈவிரக்கமின்றி விரட்டுகின்றவன், மிஸ்கீனுடைய சாப்பாட்டைக் கொடுப்பதற்கு தூண்டாதவன், சமூகத்திலே இருக்கின்ற பலவீனர்களை ஒதுக்குபவன் போன்ற பண்புகளைக் கொண்டவன் மறுமை பற்றிய நம்பிக்கையில் பலவீனமானவனே. எனவே, மறுமை நம்பிக்கையும் மனிதாபிமானமும் இரண்டும் ஒன்றாக கலந்தவை. ஒரு மனிதன் மறுமையை மிக ஆழமாக விசுவாசிக்கின்றான் என்றால் அவனது உள்ளத்திலே இரக்க உணர்வு வரும். நீதி வரும். சமூகத்திலே பாதிக்கப்பட்டவர்களையும் ஆளாக்க வேண்டும், அவர்களையும் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை வரும். அவர்களை கவனிக்க வேண்டும், அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுக்க வெண்டும் என்றெல்லாம் சிந்திக்கின்ற அந்தத் தன்மைகளை மறுமை பற்றிய நம்பிக்கை உருவாக்குகின்றது.

மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே…

எப்போதுமே பணக்காரர்கள், செல்வந்தர்கள், பெரும் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது உறவை தங்கள் தரத்துடன் இருப்பவர்களோடுதான் வைத்துக் கொள்வார்கள். கீழ்மட்டத்தில் உள்ளவர்களை அதிகமானவர்கள் கவனிப்பதில்லை. இதனை அல்லாஹுத்தஆலா வன்மையாக கண்டிக்கின்றான். இஸ்லாம் பணக்காரர்களுக்கு எதிரான மார்க்கம் அல்ல. அதிகாரங்களுக்கு எதிரான மார்க்கமும் அல்ல. ஆனால் இவர்கள் கீழ்மட்டத்தைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். பெரும் பணக்காரர்களாக இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. பணக்காரர்கள், பெரும் கோத்திரங்களில் இருப்பவர்கள், ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் தெரியுமா? அவர்கள் மூலமாக இஸ்லாம் எதிர்பார்க்கின்ற எல்லா செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. அப்படிப்பட்டவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் இருக்க வேண்டும். அப்படியான பணக்காரர்கள் நம்மில் இருக்க வேண்டும். அப்படியான பதவிகளில் உள்ளவர்கள் இருக்க வேண்டும்.

ஏழைகளின் உணவு

அல்லாஹுத்தஆலா மிஸ்கீன்களுக்கு சாப்பாட்டைக் கொடுங்கள் என்று குறிப்பிடவில்லை, மிஸ்கீன்களுக்குரிய பணியை எடுத்துச் செல்லுங்கள் என்றுதான் குறிப்பிடுகின்றான். ஒரு முஸ்லிமுடைய அடிப்படையான செயல் திட்டங்களில் மிக முக்கியமான இபாதத்தாக ஏழைகளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கின்ற, அவர்களுக்காக போராடுகின்ற, பாதிக்கப்பட்டவர்களுக்காக வேலை செய்கின்ற இந்தப் பணி ஒரு தூய்மையாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

அல்லாஹுத்தஅலா செல்வத்தை பங்கிட்டு கொடுக்கின்றபோது சிலருக்கு அதிகமாகவும் இன்னும் சிலருக்கு குறைவாகவும் கொடுக்கின்றான். எனவே, அதிகமாக வழங்கப்பட்டவர்கள் தங்களது சொத்திலும் செல்வத்திலும் மற்றவர்களுக்கு உரிய பங்கிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது வறியோருக்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கானது.
எனவே, வசதி படைத்தவர்கள் ஏதாவது ஏழைகளுக்கு கொடுக்கின்றபோது அவர் தனது பணத்திலிருந்து கொடுத்துக் கொள்வதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அது ஏழைகளுக்கு போய்ச் சேர வேண்டிய ஒரு ஹக்கு (பங்கு) தனது பணத்திலும் தனது செல்வத்திலும் சேர்ந்திருக்கிறது என்ற மனோநிலையோடுதான் அது கொடுக்கப்பட வேண்டும்.

தொழுகையாளிகளுக்கு கேடு

யார் அநாதையை விரட்டுகின்றாரோ, மிஸ்கீனுடைய ஹக்கு (பங்கு) க்காக போராடவில்லையோ அத்தகைய பண்பாடுகளோடு தொழுகின்ற மனிதன், கீழ்மட்டத்துடன் உறவுகள் வைத்துக் கொள்ளாத மனிதாபிமான பண்பாடுகள் அற்ற, தொழுகை என்ற பேரில் அடையாளமாக வைத்துக் கொண்டு தொழுகின்ற மனிதர்கள் நாசமாகி விட்டார்கள்.

தொழுகையை நிறைவேற்றிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அல்லாஹுத்தஆலா அற்புதமாக கூறுகின்றான், வாழ்க்கையை நீங்கள் கூறுபோட்டு பார்க்காதீர்கள். தொழுகை இபாதத் போன்று ஏழை எளியோர் விஷயத்தில் அக்கறை காட்டுவதும் மனிதாபிமான பண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும் ஓர் இபாதத். அங்கு நீங்கள் ஏற்றத்தாழ்வு காட்டாதீர்கள் கூறுபோட்டு பார்க்காதீர்கள் இரண்டையும் ஒன்றாகப் பாருங்கள் நீங்கள் மறுமையை நம்புங்கள் இந்தப் பண்பாடுகளை வளர்த்துக் கொள்ளுங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று அற்புதமாக சொல்லிக் காட்டுகிறான்.

நாங்கள்தான் பிரித்திருக்கின்றோம். இது சமூக வாழ்வு, இது குடும்ப வாழ்வு, இது வணக்க வழிபாடு, இது பள்ளியோடு தொடர்பான அம்சம், இது தஃவாவோடு சம்பந்தப்பட்ட அம்சம், இது விளையாட்டோடு சம்பந்தப்பட்ட அம்சம், இது பொது வேலை… என்று சொல்லி அவை மார்க்கம் அல்லாதவை போன்றும் தொழுகையை மாத்திரம் மார்க்கமாக பார்க்கும் பார்வை இருக்கிறது. சில சம்பிரதாய செயல்பாடுகளை வைத்துக் கொண்டு அதை மார்க்கமாக பார்க்கின்ற நிலையானது முற்றிலும் பிழையானது என்பதைத்தான் அல்லாஹ் இவ்வசனங்கள் மூலம் சொல்லிக் காட்டுகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை குறிப்பிட்டார்கள் : மனிதர்களே உங்களுக்கு மத்தியில் இருக்கின்ற பலவீனர்களின் காரணமாகத்தான் உங்களுக்கும் ரிஸ்க் அளிக்கப்படுகின்றது உதவி செய்யப்படுகின்றது. உங்களில் பலவீனமானவர்கள் இருக்கிறார்கள். ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள்… என்று சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் காரணமாகத்தான் உங்களுக்கும் ரிஸ்க் அளிக்கப்படுகின்றது என்று ஒரு சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

எனவே, சமூகத்தில் ஏழைகள் இருப்பது நமக்கு பெரும் பாக்கியமாகும். அவர்கள் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் துஆவினால், அவர்கள் செய்கின்ற பிரார்த்தனையின் மூலமாக சமூகத்திலே பணக்காரர்களையும் வாழ வைக்கின்றான். அவர்களின் பிரார்த்தனை தூய்மையாக இருக்கும். எனவே, அவர்களுக்காக போராடுங்கள் அவர்களுக்காக பேசுங்கள் என்பதைத்தான் இந்த ஆயத்துக்களின் நிழலில் இருந்து நாம் படிப்பினைகளாக பெற முடிகிறது.

நன்றி : சமூகநீதி அறக்கட்டளை

1 comment:

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.