சென்னையில் தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யாவின் கார் மோதி பலியான தச்சுத் தொழிலாளி முனுசாமியின் மகள் மற்றும் மகன் படிப்புச் செலவை நடிகர் விஷால் ஏற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன், தொழிலதிபர் மகளான ஐஸ்வர்யா என்ற பெண் என்ஜினீயர் குடித்து விட்டு தனது ஆடி காரை ஓட்டிச் சென்று ஏற்படுத்திய விபத்தில், தரமணியை சேர்ந்த தச்சு தொழிலாளி முனுசாமி (53) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த முனுசாமிக்கு 11ம் வகுப்பு படிக்கும் ஆனந்த் என்ற மகனும், 7ம் வகுப்பு படிக்கும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
ஜாமீன்... விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஐஸ்வர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
குழந்தைகளின் கல்வி... ஏற்கனவே, முனுசாமியின் வருமானம் போதாமல், அவரது குடும்பம் வறுமையில் வாடி வந்தது. இந்த சூழ்நிலையில் முனுசாமி திடீரென உயிரிழந்ததால், அவரது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனது.
கல்விச் செலவு... இந்நிலையில், இது தொடர்பாக தகவல் அறிந்த நடிகர் சங்க செயலாளர் விஷால், அந்த குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளார். முனுசாமியின் மகன் ஆனந்த், மகள் திவ்யா ஆகிய இரண்டு பேரின் கல்விக்கான பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தேவி அறக்கட்டளை... விஷால் தனது தாயார் தேவி பெயரில், ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளை சார்பில் அவர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்போதும் இக்குழந்தைகளின் பள்ளி முதல் கல்லூரி வரையான படிப்பு செலவை தனது அறக்கட்டளை மூலமாகவே விஷால் செய்ய இருக்கிறார்.
கத்திச்சண்டை... முன்னதாக தனது ‘கத்தி சண்டை' படப்பிடிப்பின்போது உயிரிழந்த போட்டோ பிளேட் செல்வம் என்பவரது மகன்கள் ஆகாஷ் (6-ம் வகுப்பு), சந்தோஷ் (3-ம் வகுப்பு) ஆகியோர் பள்ளியில் இருந்து கல்லூரி வரை படிக்க விரும்பும் படிப்புக்கான செலவையும் விஷால் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment