நாட்டின் 70வது சுதந்திர தின விழா நாளைக் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா நாளை கொடியேற்றுகிறார். இந்தியாவின் 70வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. தமிழக அரசும் நாளை சுதந்திரத் தினத்தைக் கொண்டாட சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு சென்னை ஜார்ஜ் கோட்டையில் ஜெயலலிதா கொடி ஏற்ற இருக்கிறார்.
சுதந்திர தின உரை... முன்னதாக, கொடியேற்ற வரும் ஜெயலலிதாவிற்கு முப்படை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீஸ் அதிகாரிகளை தலைமை செயலாளர் ராம மோகன ராவ் அறிமுகம் செய்து வைப்பார். பின்னர் திறந்த ஜீப்பில் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிடும் ஜெயலலிதா, கோட்டை கொத்தளத்திற்கு வந்து கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார்.
கலாம் விருது... இந்த விழாவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் பெயரில், `டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது'' வழங்கப்படும். இந்த விருது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு, 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
கல்பனா சாவ்லா விருது... அதேபோல், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும் இந்த விழாவில் வழங்கப்படும். இந்த விருதை பெறுபவருக்கு ரூ.5 லட்சம், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான தங்க மடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மற்ற விருதுகள்... தொடர்ந்து முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருதுகள், சிறந்த உள்ளாட்சிக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை ஜெயலலிதா வழங்குவார். இந்த விழாவில், முப்படை அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள்.
லிப்ட் வசதி... ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக ஜெயலலிதா படிக்கட்டில் ஏறிச் செல்வது தான் வழக்கம். ஆனால், சுமார் 25 படிக்கட்டுகள் கொண்ட கொத்தளத்தின் மேல் பகுதிக்கு செல்ல இம்முறை ஜெயலலிதாவிற்கு லிப்ட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒத்திகை நிறைவு... கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்து வந்த இந்த நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை இன்று காலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கோட்டை கொத்தளத்தில் உள்ள தேசிய கொடி கம்பத்திற்கு வர்ணம் பூசுவது, மேடை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு தீவிரம்... சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிரடி சோதனைகள்... 13 கடலோர மாவட்டங்களிலும் கடலோர காவல் படை மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சென்னையை பொறுத்த வரை சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் நேற்று முதல் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார்... மேலும், சென்னை விமான நிலையம், சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகளை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கின்றனர். இதுதவிர திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், முக்கிய பேருந்து நிலையங்கள் என பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகன சோதனை... இரவு நேரங்களில் போலீசார் ரோந்து, வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சாலைகளில் தற்காலிக தடுப்புகள் அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
செங்கோட்டையில் மோடி... இதேபோல், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை கொடியேற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் சுமார் 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சதி செயல்களைத் தவிர்க்கும் வகையில் மோப்ப நாய்கள் உதவியுடன் அங்குலம் அங்குலமாக பாதுகாப்பு படையினர் சோதனையிட்டு வருகின்றனர்.
பல அடுக்குப் பாதுகாப்பு... தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் தரை, வான்வழி பாதுகாப்பு என பல அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய கட்டிடங்களில் குறிபார்த்து சுடும் வீரர்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தீவிர கண்காணிப்பு... பிரதமர் கொடியேற்றும்போது, டெல்லியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானம் முலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சுற்று வட்டாரப்பகுதி 500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பின் ஒரு பகுதியாக பாரா கிளைடிங் மற்றும பலூன்கள் வரும் அக்டோபர் 10ம் தேதி வரை பறக்க விட டெல்லி போலீசார் தடை விதித்துள்ளனர்.
No comments:
Post a Comment