
சட்டப்பேரவைத் தேர்தல் கோடை வெயிலுக்கு இணையாக அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பிரச்சாரத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெட்டி வடிவ (சவுண்ட் பாக்ஸ்) ஒலி பெருக்கிகள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பெட்டி வடிவ ஒலி பெருக்கிகளில், அதிகளவில் அதிர்வுகளுடன் ஒலி எழுப்புவதால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, 'முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரம்மற்றும் பொதுக்கூட்டங்களின்போது கூட்டம் நடக்கும் இடங்களில் பகல் முழுவதும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை விட அதிக ஒலியுடன் ஒலி பெருக்கிகளை அலறவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதித்ததுபோல, ஒலி பெருக்கியை பிரச்சாரம் நடைபெறும் நேரத்துக்கு முன்னர் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்தவும், அதிக அதிர்வுகளுடன் அவற்றைப் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இதுதொடர்பாக மின்சாதன தொழில்நுட்பக் கலைஞர்கள் கூறியதாவது:
கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளின் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்பதுடன், காதில் ரீங்காரம் எழும் அளவுக்கு ஒருவித கூர்மையான ஒலியாக இருக்கும். அதனால், மக்களின் செவித்திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அதிர்வுகள் அதிகம் எழாது. ஆனால், பெட்டி வடிவ ஒலி பெருக்கியில் அதிர்வு அதிகப்படுத்தக் கூடிய வசதி உள்ளது. குறிப்பாக, அதிகஅதிர்வு கொண்டதாக ஒலியை எழுப்ப முடியும். இந்நிலையில், பெட்டி வடிவ ஒலி பெருக்கியை பொது இடங்களில் பயன்படுத்துவோர் அதிக அதிர்வுகளுடன் அவற்றை ஒலிக்கச் செய்கின்றனர்.
இது இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடிய ஒலியாக இருந்தாலும், பொதுமக்களுக்கு இதயத்துடிப்பினை அதிகரிக்கச் செய்யும் ஒலியாகவே இருக்கும். எனவே, அதிக அதிர்வுடன் ஒலி பெருக்கியைப் பயன்படுத்தும்போது, அது வயதானவர்களுக்கு ஆபத்தாகவே அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment