சுவாதியுடன் ராம்குமார் பேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டது தொடர்பாக, பேசியது தொடர்பா எந்த ஆதாரமும் இல்லை என்று ராம்குமாரின் வக்கீல் ராமராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தை தான் முழுமையாக ஆய்வு செய்து விட்டதாகவும், அதிலிருந்து சுவாதிக்கு எந்தத் தகவலும் போகவில்லை என்றும் ராமாராஜ் கூறியுள்ளார். ஆனால் சுவாதியை, பேஸ்புக் மூலமாக நட்பு பிடித்ததாக ராம்குமார் தெரிவித்ததாக முன்பு போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வக்கீல் ராம்ராஜ் சுவாதி படுகொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் வக்கீலாக தற்போது ராமராஜ் தலைமையிலான வக்கீல்கள் குழு செயல்பட்டு வருகிறது. இவர்கள் ராம்குமார் நிரபராதி என்று கூறி வருகின்றனர்.
மீனாட்சிபுரத்தில் ஆய்வு இந்த வழக்கில் நுழைந்ததும் வக்கீல் ராமாராஜ், ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்குச் சென்று அவரது பெற்றோர், சகோதரிகளைச் சந்தித்துப் பேசினார். ஊர் மக்களையும் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர் சொந்த ஊருக்கு வந்தார்.
விடை தெரியாத கேள்விகள் இதுகுறித்து ராமராஜ் கூறுகையில், கடந்த முறை இங்கு வந்து ராம்குமார் தந்தை மற்றும் உறவினர்களுடன் பேசினேன். தற்போது மீண்டும் வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்க வந்துள்ளேன். இந்த வழக்கில் பல கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான விடைகளை தேடி இங்கு வந்துள்ளேன்.
பேஸ்புக்கில் ஆதாரம் இல்லை ராம்குமாரின் பேஸ்புக் கணக்கை நான் ஆய்வு செய்தேன். அதில் ராம்குமார் பேஸ்புக் மூலம் சுவாதியை தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் பல விவரங்கள் இந்த வழக்கில் எனக்கு கிடைத்துள்ளன. அவற்றை இப்போது நான் வெளியிட முடியாது என்றார்.
முரண்பாடாக இருக்கிறதே முன்னதாக பேஸ்புக் மூலமாகத்தான் சுவாதியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், சாட் செய்துள்ளதாகவும் ராம்குமார் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமாரின் வக்கீல் முற்றிலும் நேர்மாறான தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரண்ட் லிஸ்ட்டிலேயே இல்லை! ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் போய் பார்த்தால் அவரது நண்பர்கள் பட்டியலில் சுவாதியின் பெயர் இல்லை, சுவாதி குறித்த எந்த குறிப்பையும் எந்த போஸ்ட்டிலும் காண முடியவில்லை.
எங்கே அந்த சூரிய பிரகாஷ்? மேலும் சூரிய பிரகாஷ் என்பவர் மூலமாகத்தான் சுவாதி அறிமுகமானதாக ராம்குமார் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த சூரிய பிரகாஷ் பெயரையும் நண்பர்கள் பட்டியலில் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment