தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசரை நியமிக்க கூடாது என்று 38 மாவட்ட காங். தலைவர்கள் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த சில வாரங்கள் முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எனவே, தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், வசந்தகுமார், டாக்டர் ஜெயக்குமார், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், நடிகை குஷ்பு ஆகியோர் தலைவர் பதவி ரேசில் உள்ளனர். திருநாவுக்கரசர் அல்லது ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அதிலும் திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 38 மாவட்ட தலைவர்கள், அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், திருநாவுக்கரசரை தலைவராக நியமிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருநாவுக்கரசர் எந்த கட்சிக்கும்
நம்பகத்தன்மையில்லாதவர் என்று குற்றம் சாட்டியுள்ள அந்த தலைவர்கள், இப்படிப்பட்டவர் கரங்களில் காங்கிரஸ் கட்சி போகக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் காலதாமதம் ஆகிவருவதற்கும் அவர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர். இளங்கோவன் இந்த கடித விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக பொருமுகிறார்கள் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்.


No comments:
Post a Comment