Latest News

காஞ்சிபுரம்: திமுக நிர்வாகி சீனிவாசன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை- உள்கட்சி கொலையா?


மதுராந்தகம் அருகே திமுக நிர்வாகி சீனிவாசன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெரும்பேர்கண்டிகையில் சீனிவாசனை வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர். கொலை செய்யப்பட்ட சீனிவாசன் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்தவர். அச்சிறுப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன், 45. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்தார். இன்று காலை சீனிவாசன் தொழுபேட்டில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

இன்று காலையில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்தனர். கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த அந்த மர்ம நபர்கள் சீனிவாசனை சுற்றி வளைத்தனர். அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். அவரை விரட்டிச் சென்ற கொலைக் கும்பல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டு விழுந்ததில் சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை வெறி தாக்குதலை பார்த்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய சீனிவாசனை மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையுண்ட சீனிவாசன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்து உள்ளார். கட்சியிலும் அவருக்கு செல்வாக்கு இருந்து உள்ளது. இதன் மூலம் அவரது உறவினர் பெண்ணுக்கும் கட்சியில் பொறுப்பு வாங்கி கொடுத்து உள்ளதாக தெரிகிறது. எனவே கட்சியில் சீனிவாசனின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் கூலிப்படையை ஏவி அவரை தீர்த்து கட்டினரா? அல்லது ரியல் எஸ்டேட் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. அச்சிறுப்பாக்கத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கொலையுண்ட சீனிவாசனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தி.மு.க. பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. சீனிவாசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் அங்கு இல்லை. அவரது செல்போன் மட்டும் கிடந்தது. எனவே கொலையாளிகள் சீனிவாசனின் இருசக்கர வாகனத்தையும் எடுத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக நிர்வாகிகள் ஆங்காங்கே கொலை செய்யப்பட்டு வருகின்றனர். 

பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராகவும், நகர்மன்ற 9வது வார்டு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்த த.மனோகரன், என்பவர் கடந்த வாரம் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் இப்போது அச்சிறுப்பாக்கத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.