இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்கும் திட்டம் இல்லை என அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கைக் கடற்பகுதியில் அத்துமீறி நுழைவதாகக் கூறி அந்த நாட்டுக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கைக் கடற்பகுதியில் அத்துமீறி நுழைவதாகக் கூறி அந்த நாட்டுக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல், அந்த நாட்டு மீனவர்களும் தமிழக மீனவர்களைத் தாக்கி மீன்களைப் பறிப்பது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது போன்ற அட்டூழியங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இதனால் தமிழக மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தொடர் கதையாகி வரும் இந்த பிரச்னையைத் தீர்க்க இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும் இரு நாட்டு மீனவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. எனினும் சுமூகத் தீர்வு இன்னும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் 250 பேருக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், இதை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இலங்கை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஆண்டுக்கு 75 நாட்கள் அனுமதிக்குமாறு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கும் எந்தவித திட்டமும் எங்களிடம் இல்லை. எங்கள் நாட்டு மீனவர்கள் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது.
தமிழக மீனவர்கள் குறித்து இந்திய அரசு பல்வேறு கோரிக்கைகளை எங்களிடம் வைத்திருக்கிறது. ஆனால், எந்தக் கோரிக்கையையும் இலங்கை ஏற்கவில்லை'' என்றார். இலங்கை அமைச்சரின் மறுப்பு செய்தியால், மகிழ்ச்சியில் இருந்த தமிழக மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நன்றி : ஆனந்த விகடன்


No comments:
Post a Comment