Latest News

அடையாறு, கூவத்தில் செய்யாத பணிக்கு பொய்யாக நிதி ஒதுக்கீடா?: நீதி விசாரணைக்கு கருணாநிதி வலியுறுத்தல்


அடையாறு, கூவம், கொசஸ்தலையாறுகளை தூர்வாரும் பணியே செய்யாமல் நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளியிட அதிமுக அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமூக நீதி தத்துவத்துக்கு எதிரான ‘கிரீமி லேயர்' முறையை நீக்க வேண்டும். தேர்வாகியுள்ள பிற்படுத்தப்பட்டோரின் நலன்காக்க, இதர 

பிற்படுத்தப்பட்டோரை உரிய பதவிகளில் பொருத்தமான தகுதி நிலைகளில் பணியநியமனம் செய்ய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என பிரதமரை கேட்டிருந்தேன்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக தீர்க்காவிட்டால், இட ஒதுக்கீட்டில் நம்பிக்கை உள்ளோர் போராட தொடங்கிவிடுவர் என எச்சரித்துள்ளது. பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‘கிரீமிலேயர்' பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நத்தம் விஸ்வநாதன் மின்துறை அமைச்சராக இருந்த போது மின்வாரியத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.சீனிவசஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என கூறியுள்ளது.

இதை பார்க்கும் போது வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகிறது. இதனால், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற உயர் நீதிமன்றத்தில் சீனிவாஸ் கோரியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமைச் செயலாளர், சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார். திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் தற்போது பொன்முடி, சுரேஷ்ராஜன் போன்றவர்கள் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட போதும் ‘அப்பீல்' செய்கின்றனர். சட்டப்படி இது வேறுபாடான, முரண்பாடான அணுகுமுறையாகும். தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ.17 ஆயிரத்து 432 கோடி நிதியுதவியை மத்திய அரசிடம் இருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது. ஆனால், மாநில அரசு சார்பில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 640 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்படி நிவாரணப்பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும். மொத்தத்தில் 15 சதவீத அளவுக்கு கூட வெள்ள நிவாரணப் பணிகள் முழுமை பெறவில்லை என்பது தான் உண்மை. நிவாரண உதவிகள் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கொண்ட குழு முன்னிலையில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அதிமுக அரசு ஏற்கவில்லை.
சென்னை வெள்ள பாதிப்புக்கு காரணம் அடையாறு, கூவம், 

கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய்களை முறையாக தூர்வாராததும், ரூ.154 கோடி ஒதுக்கி செலவழிக்கப்படாததும் தான் என தற்போது தெரியவந்துள்ளது. இப்பணிகளுக்காக பொன்னேரி, மதுரை, திருச்சி மற்றும் ஆந்திர ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிறுவனங்கள் முதல் கட்ட பணிகளை கூட தொடங்காத நிலையில், ஆனால், நிறுவனங்கள் அப்பணிகளை மேற்கொண்டு வருவதாக கணக்கு காட்டி, பில் தொகையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். வெள்ளம் வருவதற்கு முன்னரே, பணிகளை முடித்திருந்தால் இந்த வெள்ள பாதிப்பின் சோகம் ஏற்பட்டிருக்காது என வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த ஊழல் பற்றி, உயர் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருக்கும் ஒரு நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்தி, உண்மை விவரங்களை நாட்டிற்குத் தெரிவிக்க அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும். மடியில் கனம் இல்லை என்றால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் நீதி விசாரணைக்கு மனப்பூர்வமாக அதிமுக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.