இளம்பெண் சுவாதி கொலை வழக்கு பல்வேறு மர்மங்களுடன் பயணப்பட்டு வரும் நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கடந்த ஜுன் 24ம் தேதி கொடுரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இவ்விவகாரத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள டி.மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ராம்குமார் முக்கிய குற்றவாளி என போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், ராம்குமார் தான் குற்றவாளியா என்பது குறித்து சந்தேகம் எழுப்பும் வகையில் வீடியோ இணைப்பு ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் ஆரம்பம் முதலே நிலவும் பல்வேறு குழப்பங்களையும், சந்தேகங்களையும் தொகுத்து வீடியோ பதிவாக்கியுள்ளனர். புழல் சிறையில் உள்ள ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்திற்கான பாஸ்வேர்ட் ஐ அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் மூலம் பெற்று, தீலிபன் மகேந்திரன் என்பவரால் ஒரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 'சுவாதிய அறஞ்சவன் எவன்டா' என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ் அப்பிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விடை தெரியாத கேள்விகளுடன் பயணமாகி வரும் சுவாதி கொலை வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளை இந்த வீடியோ முன்வைத்துள்ளது. சுவாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது வீடியோவை தயாரித்தவர்கள் தரப்பு வாதமாக உள்ளது. 25 நிமிடம் 12 வினாடிகள் ஓடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, நேற்று ஜூலை 17 காலை 4 மணியளவில் முகநூலில் பதிவேற்றப்பட்டு பலராலும் பார்க்கப்பட்டு வருவதுடன், வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராம்ராஜ், ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் நான் எந்த பதிவையும் போடவில்லை. ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக் நண்பர்கள் அல்ல. சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு, மற்றவர்கள் சுவாதியை பேஸ்புக்கில் தேடியது போல் ராம்குமாரும் தனது பேஸ்புக் பக்கத்தில் தேடியுள்ளார். இதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் கிடைக்க வில்லை என்றார்.
ராம்குமாருக்கு நான் மட்டும் வழக்கறிஞர் அல்ல. 17 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு உள்ளது. ஆதாரங்களை திரட்டுவதற்காக சிறையில் ராம்குமாரை சந்தித்த போது அவருடைய பேஸ்புக் பாஸ் வேர்டை வாங்கினேன். அந்த பாஸ்வேர்ட் குழுவினரிடம் கொடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். ராம்குமார் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ பதிவை போட்டவர் திலீபன் மகேந்திரன். இந்த திலீபன் மகேந்திரன் என்பவர் கடந்த ஜனவரி மாதம், இந்திய தேசிய கொடியை எரித்து அதனை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டு பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தினார். இதில் அவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஃபேஸ்புக் மூலம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திலீபன் மகேந்திரன். இவர் ராம்குமாரின் பேஸ்புக் பாஸ்வேர்டை அவரது வழக்கறிஞரான ராமராஜ் மூலம் சிறையில் இருக்கும் ராம்குமாரிடம் இருந்து பெற்று, ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா? என்ற வீடியோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


No comments:
Post a Comment