Latest News

சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்


பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் தமக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று ராம்குமார் தரப்பு கூறும் நிலையில் உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சமீப காலமாக உயர்நீதிமன்றமே பல வழக்குகளில் நேரடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் அறிவிப்புகளை மக்கள் பிரச்சனைகளில் தந்திருப்பது, அனைவராலும் பாராட்டும் வண்ணம் உள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி இறந்து போன D.S.P விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது, அரசு நிலங்கள், நீர் நிலைகளை அரசு கவனத்தில் கொண்டு பராமரிக்க தவறினால் உயர்நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு அப்பணியை செய்ய உள்ளதாக அறிவித்தது. சுவாதி கொலை வழக்கு மிகவும் மெத்தன போக்கில் சென்று கொண்டிருப்பதை கண்டித்து உயர்நீதிமன்றம் அறிவிப்பு தந்த பின்பு தான், இந்த வழக்கில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்து உள்ளது. இருப்பினும் இந்த கொலைக்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ராம்குமார் தரப்பு வாக்குமூலம் அளித்த பின்பு, மேலும் பல்வேறு சந்தேகங்கள் உருவாகி உள்ளது. உடனடியாக உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து அதிகபட்ச தண்டனை வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரத்தில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு பல சந்தேகங்களை உருவாக்கி உள்ள நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. STATE BANK OF INDIA மற்றும் RBI இந்த பணத்திற்கு உரிமை கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில், இந்த பணம் உண்மையில் யாருடைய பணம் என்பதை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். சினிமா தயாரிப்பாளர் மதன் அவர்கள் காணாமல் போன விவகாரத்திலும், காவல்துறை உடனடியாக கண்டிபிடிக்கவில்லை எனில் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று எச்சரித்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் செயல்பாடுகள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. காவல்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் பிரச்சனைகளில் உடனடியாக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல், ஒரு நிகழ்வு நடந்து முடிந்த பிறகு அதைப்பற்றி விசாரணை செய்வது என்பது தமிழக காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்த துறையாக மாறி உள்ளது. Scotland Yard காவல்துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை, ஆளுங்கட்சிக்கு ஏவல் துறையாக மாறி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.