தஞ்சாவூர்: அதிமுகவில், தலைமைக்கு எதிராகச் செயல்படும் துரோகிகள் இருப்பதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்,அவர்களைக் கண்டுபிடித்து களையெடுக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தஞ்சாவூரில் நடந்த அதிமுகவின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், " சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியில் அம்மாவுக்கு சுத்தமாகத் திருப்தி இல்லை. அதிமுகவில் துரோகிகள் அதிகமாக இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் களை எடுக்க வேண்டும். வர இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் அம்மாவின் தலைமையில் 100 சதவீதம் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்" என்றார்.
கடந்த ஐந்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், அதிமுகவின் நால்வர் அணியில் முக்கியமானவராக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம்,சட்டமன்றத் தேர்தல் 2016ல் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து அவர் கட்சியின் மாவட்ட நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்தார். பின்னர் ராஜ்யசபா எம்பி, கட்சியில் முக்கிய பதவி என அவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது. இந்நிலையில் தஞ்சை அம்மா பேரவை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது. இதைத் தொடங்கி வைக்க வைத்திலிங்கம் வந்திருந்தார். அவரை வாழ்த்தி நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். தமிழினம் காத்து நிற்கும் ”தமிழர் குல சாமி” என ஜெயலலிதாவை பாராட்டி துண்டு பிரசுரமும் நிர்வாகிகள் அச்சிட்டு இருந்தனர்.
நன்றி : ஆனந்த விகடன்


No comments:
Post a Comment