திருவண்ணாமலை: செங்கத்தில், கணவன், மனைவி, மகனை நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள் மூன்று பேரை பணியிடமாற்றம் செய்யது வேலூர் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணமலை மாவட்டம், செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா. அவரது மனைவி உஷா. மகன் சூர்யா, இவர்கள் 3 பேரும் இன்று செங்கத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள நகைக்கடை ஒன்றின் வெளியே கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், விசாரிக்கச் சென்ற போலீஸ்காரர்களிடம் தங்கள் தனிப்பட்ட விஷயம் என்று கூறியதாகவும் தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன், மனைவி மற்றும் மகன் ஆகியோரை மூன்று காவலர்கள் சரமாரியாக தாக்கினர். லத்தியால் விரட்டி விரட்டி அடித்த அவர்களை தடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். ஒருகட்டத்தில் லத்தி உடைந்த பின்னும் கையால் அவர்களை தாக்கினர். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். நடுரோட்டில் இந்த பிரச்சினை நடந்ததால் இருபக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் செங்கம் போளுர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து ராஜாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விசாரிக்க சென்ற இடத்தில் லத்தியால் அடித்து காயப்படுத்திய காவலர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். எனினும் சமாதானம் அடையாத பொதுமக்கள் திருவண்ணாமலை-பெங்களூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் செங்கத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று காவலர்களையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment