Latest News

' 600 சிம்கார்டுகள், 25 மேன்சன்கள், தென்காசி அரிவாள்..!' -ஆந்திரா வரை நீளும் சுவாதி கொலை வழக்கு


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ' ராம்குமார்தான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமாரை, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள  டி.மீனாட்சிபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்தது போலீஸ். நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம், மாஜிஸ்திரேட் ராமதாஸ் ரகசிய வாக்குமூலம் வாங்கினார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை, மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பியது நீதிமன்றம். போலீஸ் விசாரணையின்போது, சுவாதியின் நண்பர் முகமது பிலால் சித்திக் உள்ளிட்ட சிலரும் உடனிருந்தனர்.

"கொலை நடந்த மூன்றே நாட்களில் ராம்குமார்தான் குற்றவாளி என்ற இறுதி முடிவுக்குக் காவல்துறை வந்துவிட்டது. அதற்கேற்ப ஏராளமான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த வழக்கிற்கும் ராம்குமாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் தேவையில்லை. ஆனால், கொலைக்கான பின்னணி ஒருதலைக் காதல் என்று சொல்வது தவறானது" என்கிறார் இந்த வழக்கில் ஆரம்பம் முதல் பயணிக்கும் வழக்கறிஞர் ஒருவர்.

அவர் மேற்கொண்ட விசாரணையின்படி எழுப்பப்படும் சந்தேகங்கள் இதோ...!
1. சுவாதி படுகொலை வழக்கு மாநில போலீஸாருக்கு மாற்றப்பட்ட தினத்தன்றே, நுங்கம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 25 மேன்சன்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சம்பவ நாளன்று செங்கோட்டைக்கு கிளம்பிய ராம்குமார் மீது சந்தேகம் வலுத்துவிட்டது. அறையில் தங்குவதற்காக ராம்குமார் கொடுத்த விண்ணப்பப் படிவத்தில் இருந்த படமும் சி.சி.டி.வி பதிவுகளும் சந்தேகத்தை உறுதி செய்தன.

2. நுங்கம்பாக்கம் மேன்சன்களில் தங்கியிருந்தவர்களின் 600 செல்போன் நம்பர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், கொலை நடந்தபோது சுவாதியின் செல்போன் டவரும் ராம்குமாரின் செல்போன் டவரும் ஒரே இடத்தைக் காட்டியுள்ளன. வழக்கின் மிக முக்கியமான ஆதாரம் இது.
3. ஐந்து முறை ராம்குமார் சுவாதியைப் பின்தொடர்ந்துள்ளார். 

அப்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் பிலாலுக்கு மெசேஜ் அனுப்பிய சுவாதி, 'கறுப்பாக, ஒல்லியாக இருக்கும் ஒருவன் என்னைப் பின் தொடர்கிறான்' எனக் கூறியுள்ளார். அந்த மெசேஜ்களை அனுப்பும் நேரத்தில் ராம்குமார் இருந்த இடமும், சுவாதி இருந்த இடமும் ஒன்று என 

துல்லியமாகக் காட்டுகிறது செல்போன் டவர். அதாவது நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரையில் சுவாதியைப் பின்தொடர்ந்துள்ளார் ராம்குமார்.
4. ஏப்ரல் மாதத்தில் சென்னை வந்த ராம்குமார் வேறு எங்கும் வேலைக்குப் போகவில்லை. அந்த மாதம் செல்போன் அலைவரிசை நுங்கம்பாக்கத்தையே காட்டுகிறது. மே மாதத்தில் பல நாட்கள் மேன்சனைச் சுற்றியுள்ள பகுதிகளை வலம் வந்திருக்கிறார். அதே மாதம் 20 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் ஆந்திரா சென்று வந்திருக்கிறார். அங்கு யாரை சந்தித்தார்? ஆந்திரா சென்றதற்கான நோக்கம் என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. அந்த இரண்டு நாட்களும் ராம்குமாரின் செல்போன் ஆந்திரா டவரைக் காட்டுகிறது. 'ஆந்திராவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. வேலைக்காக சென்று வந்திருக்கும் வாய்ப்புகளும் இல்லை' என்கின்றனர் சிலர்.

5. நெல்லையில் ராம்குமாரை கைது செய்தபோது அவரது வீட்டில் இருந்து சுவாதியின் செல்போனைக் கண்டெடுத்ததாக போலீஸ் சொல்கிறது. ஆனால், கொலை நடந்த மறுநாள் (25-ம் தேதி) இரவு 8.30 மணிக்கு சுவாதியின் செல்போன் சென்னையில் ஆன் ஆகியிருக்கிறது. சில நிமிடங்களில் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது சுவாதியின் செல்போன் யாரிடம் இருந்தது? 24-ம் தேதி இரவே ராம்குமார் செங்கோட்டைக்குப் போய்விட்டார். கொலைக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, சுவாதியின் செல்போன் மைசூரு டவரைக் காட்டுகிறது. அவர் ஏன் அங்கு சென்றார்? தனியாகச் சென்றாரா... நண்பர்கள், உறவினர்களுடன் சென்றாரா..? அதைப் பற்றி போலீஸார் மௌனம் காப்பது ஏன்?
6. ராம்குமாரை முன்னிறுத்தி இந்தப் படுகொலைக்கான ஆபரேஷனை இயக்கியவர்கள் யார்? சுவாதி கொல்லப்பட வேண்டும் என எண்ணியவர்களுக்கு, ராம்குமார் கருவியாகப் பயன்பட்டாரா? கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, தென்காசியில் உள்ள பாப்பம்பாளையத்தில் வாங்கப்பட்டிருக்கிறது. சுவாதி கொலைக்கான ஆபரேஷனுக்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டாரா ராம்குமார்?

- இப்படி சந்தேகங்களை விவரித்தவர், " இந்த வழக்கில் வெளியில் வராத மர்மங்கள் பல இருக்கின்றன. சுவாதியின் நட்புகள், அவரது தந்தையோடு ஏற்பட்ட சண்டைகள் என முக்கியமான சிலவற்றைத் திட்டமிட்டு மறைக்கின்றனர். கைது செய்யப்பட்ட ராம்குமார், சுவாதியைக் காதலித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அவர் சுவாதியைப் பின்தொடர்ந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஏன் பின் தொடர்ந்தார்?; சுவாதியைக் கொல்வதற்கான ஆபரேஷனை வடிவமைத்தது யார்?; ராம்குமாரை இயக்கியது யார் என்பதைப் பற்றியெல்லாம் போலீஸாருக்கு எவ்வித அக்கறையும் இல்லை.

அதனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் வழக்கின் போக்கு வேறு திசையில் பயணிக்கும் என்பதால், ஒருதலைக்காதல் என்பதோடு வழக்கை முடித்துக் கொள்ள விரும்புகின்றனர். நேற்று ஐந்து வெற்றுத் தாள்களில் ராம்குமாரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர் போலீஸார். அதில் வேண்டிய வரிகளை இட்டு நிரப்பும் வாய்ப்புகளே அதிகம். எனவே, மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டால் கொலைக்கான உண்மைப் பின்னணி வெளியாகும் என நம்புகிறோம்" என்றார் நிதானமாக.
நன்றி : விகடன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.