நீண்ட தூரம் ரயில் பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளின் வசதிக்காக 6 மாதம் வரை கெட்டுப்போகாத வகையில் 8 வகையான உணவுப் பொருட்களை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. உயர் அதிகாரிகள் கூறியதாவது: நீண்ட தூரம் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளை கருத்தில் கொண்டு, இரவு நேரங்களில் அவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். மத்திய அரசின் கீழ் செயல்படும் டி.எப்.ஆர்.எல். நிறுவனம் மூலம் தற்போது இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்டுகிறது.
இதில் லெமன் சாதம், புளிசாதம், வெஜ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பருப்பு சாதம் மற்றும் கோதுமை உப்புமா உள்ளிட்ட 8 வகையான சாப்பாடு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த சாப்பாடு வகைகளை வாங்கிய பின்னர் 2 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு அதன் பின்னர் பிரித்து சாப்பிடலாம். இந்த உணவு
வகைகள் குறைந்தது 6 மாதம் வரை கெட்டுப்போகாது. பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் சென்னை எழும்பூர் மற்றும் சென்டிரல் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த 8 வகையான உணவு வகைகளும் அடுத்த 2 நாட்களுக்கு சலுகை விலையில் ரூ.24-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், அடுத்த ஒரு மாதத்துக்கு இந்த சாப்பாடு வகைகள் ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. விரைவில் இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ரெடி டூ ஈட்' என்று பெயர் வைத்து இருக்கிறோம் என்று கூறினர். இது
தொடர்பாக சென்னை கோட்ட மேலாளர் அனுபாம் சர்மா டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐஆர்சிடிசி 'ரெடி டூ ஈட்' திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கத்தையொட்டி சலுகை விலையில் உணவு வகைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment