விஜயகாந்தினை அழித்தொழிக்கவே ஜெயலலிதா ஏவியுள்ள ஏவுகணைதான் வைகோ என்று தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏவான பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், "எங்களை நீக்கியது கட்சியின் சட்டப்படி செல்லாது. நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிக் காட்டுகிறோம். ஆனால், சம்பந்தமில்லாமல் வைகோ எங்களை அவதூறாக பேசுகிறார். வைகோவின் பேச்சை ஒவ்வொரு தே.மு.தி.க தொண்டனும் வெறுக்கிறான். ஜெயலலிதா அரசால் ஏவப்பட்ட ஏவுகணை இந்த வைகோ.
அது தே.மு.தி.கவை அழிக்க வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏவுகணையை நடுவானில் நிறுத்தி சிதறடிக்கவில்லையென்றால் தே.மு.தி.க சிதறிவிடும். கேப்டன் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டிய காலகட்டம் இது. கேப்டனையும் காப்பாற்ற வேண்டும். கேப்டன் தொண்டனையும் காப்பாற்ற வேண்டும். அந்த மனநிலையில்தான் இருக்கிறோம். எங்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி எல்லாம் வேண்டாம். அதற்காக அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். உயர்மட்டக் குழுவில் இருக்கிறோம். பொதுக்குழுவுக்குத்தான் எங்களை நீக்கும் அதிகாரம் உண்டு. அவர்கள் கூடி ஏக மனதாக முடிவை அறிவிக்க வேண்டும். எங்களுக்கு எந்த ஷோகாஸ் நோட்டீஸும் தலைமை கொடுக்கவில்லை. தலைவர் எங்களை நீக்கியது தவறு. எங்களையே நாங்கள் தியாகம் செய்து கொண்டு, அழித்துக் கொண்டு கட்சியைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். உள்ளே நுழைந்தால் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதை முறியடிப்போம். கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனிப்பட்ட சந்திரகுமாரோ, தனிப்பட்ட பார்த்திபனோ வைக்கவில்லை. ஒட்டுமொத்த தொண்டர்களும்தான் கோரிக்கை வைக்கிறார்கள். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அனைவரின் மனநிலையை நாங்கள் பிரதிபலிக்கிறோம். கட்சியில் ஜனநாயகம் என்ற கதவே திறந்தே இருக்கிறது. சட்டரீதியாக போராடுவதைவிட, எங்கள் கோரிக்கையை கேப்டனிடம் வலியுறுத்திக் கொண்டே இருப்போம். எங்கள் அடுத்தகட்ட முடிவை இன்று அறிவிப்போம். ஆனால், எந்தக் கட்சியிலும் சேர மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment