தேமுதிகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்.எல்.ஏ சந்திரகுமார் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: விஜயகாந்த், பிரேமலதாவிடம் எந்த இடத்திலும் மரியாதை குறைவாக நாங்கள் நடந்து கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்தைத்தான் கூறியிருந்தோம். இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக, எந்த வித விளக்கமும் கேட்காமல், நோட்டீஸ் கூட அனுப்பாமல், பேட்டி அளித்த அனைவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.
எங்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்பதை பகிரங்கமாக இப்போது தெரிவித்துக்கொள்கிறேன். மொத்தம் 23 கொண்டதுதான் ஒழுங்கு நடவடிக்கை குழு. அந்த குழுவை சேர்ந்த 5 பேர் என்னுடன் உள்ளனர். கட்சியின் சட்ட விதியில், சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்க வழி கிடையாது என்ற விதி உள்ளது. கட்சியினர் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக கட்சி தலைமை கருதினால், 23 பேர் பரிந்துரை அளித்தால்தான் அவரால் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த அடிப்படை விதிமுறையை கருதாமல், திமுகவோடு கூட்டணி வைக்க கோரிய ஒரே காரணத்துக்காக எங்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல, எங்களை கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களை வரவழைத்து எனக்கு எதிராக பேச சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு "உங்களை போல பேச எங்களுக்கு தைரியம் இல்லை. எனவே விருப்பத்திற்கு மாறாக உங்களை திட்டிவிட்டோம்" என்று மன்னிப்பு கேட்டனர். எத்தனையோ மாவட்ட செயலாளர்கள் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைத்ததை விரும்பாமல் பணத்தை திரும்ப பெற்றுள்ளது உண்மையா இல்லையா? வேட்பாளர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கிறார்களா இல்லையா? இதைத்தானே நானும் சொன்னேன். அப்பாவி தொண்டர்கள் சிலரை பிடித்து வைத்து வேட்பாளர்களாக்கி பலி கடாவாக்குகிறீர்களே, இது நியாயமா என்பதுதான் எனது கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித்தார். இரண்டொரு நாளில் தேமுதிகவின் பல மாவட்ட நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து பேச உள்ளேன். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
No comments:
Post a Comment