தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக சட்டமன்ற தேர்தலை தாமதமாக நடத்த சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் தேர்தல் அட்டவணையை மாற்றும் திட்டம் எதுவும் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருகிற நிலையில், விரைவில் வாக்கு இயந்திரங்கள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பேரிடர் ஏற்பட்டும் தேர்தல் அட்டவணை மாற்றியமைக்கப்படவில்லை. தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேட்டுக் கொண்டதையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது என குறிப்பிட்டார். சட்டசபை தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் துவங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக மேற்கு வங்காளம் சென்று பார்வையிட திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி உட்பட தேர்தல் அதிகாரிகள் அச்சல் குமார் ஜோதி, ஒ.பி. ராவத் ஆகியோர் அசாம் மாநிலம் செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தேர்தல் குழுவின் இறுதி அட்டவணை முடிவானதும் மற்ற மாநிலங்களில் ஓரிரு வாரங்களுக்குள் பார்வையிடலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாடு மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே 23ஆம் தேதிக்குள் தேர்தல் முடிவடையும் எனவும், அசாம் மாநில தேர்தல் ஜூன் 6ஆம் தேதிக்குள் முடியும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment