சீனாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவர 2,100 தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் காற்று மாசுபாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள காரணத்தால் அங்கு அண்மையில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர், அவை விலக்கி கொள்ளப்பட்டன. இதையடுத்து 2,100 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காற்று மாசுபாடு காரணமாக 3-வது நாளாக காற்றில் நச்சு கலந்து பனிப்புகை நிலவுகிறது. கடந்த சனிக்கிழமை முதல் இந்த சூழ்நிலையை சமாளிக்க தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 2,100 தொழிற்சாலைகளில் நடைபெறும் உற்பத்தியை குறைக்கவும், சில தொழிற்சாலைகளில் முற்றிலுமாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பீஜிங் உட்பட 33 நகரங்களில் பனிப்புகை சூழ்ந்துள்ளது. இதை 30 சதவீதம் வரை குறைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக நகரின் சுற்றுச் சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டினால், ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஒரு ஆய்வுத்தகவல் கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 4,400 பேர் உயிரிழக்கின்றனர்.
No comments:
Post a Comment