புவனேஸ்வர்/ கோவை: ரைட்மேக்ஸ் சிட்பண்ட் நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக ஒடிஷா மற்றும் தமிழகத்தின் கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினர். மேற்கு வங்கம், ஒடிஷாவில் சாராத சிட் பண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பொதுமக்களிடம் பெருமளவு பணத்தை வசூலித்துவிட்டு பின்னர் அறிவித்தபடி பொதுமக்களுக்கு திருப்பிக் கொடுக்காமல் பல நூறு கோடி ரூபாயை மோசடி செய்தன. இதில் சாரதா சிட் பண்ட் நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது.
இப்படி பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களும் கொள்ளையடித்த கதைகளை அம்பலப்படுத்தியது சாரதா சிட் பண்ட் மோசடி. அதேபோல் ஒடிஷாவில் அடுத்தடுத்து சிட் பண்ட் மோசடிகள் அம்பலமாகின. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மொத்தம் 44 சிட் பண்ட் நிறுவனங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனடிப்படையில் ரைட்மேக்ஸ் என்ற சிட் பண்ட் நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாகவும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் ரவீந்தரநாத் ஜெனா, வி. லாகனயா, ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இந்த இயக்குநர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஒடிஷா மற்றும் தமிழகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கோவையில் 4 இடங்களில் இந்த ரெய்டை சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment