சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 19 ஆயிரம் பேரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகின்றனர். வரலாறு காணாத அளவில் பெய்த வடகிழக்கு பருவமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை மழைநீர் தேங்கியதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர்.
நாலாபுறமும் மழைநீர் சூழ்ந்து கொண்டதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவின் உதவியை நாடியது. இதையடுத்து வெள்ளத்தால் மூழ்கிய, மக்களை காப்பாற்ற ராணுவத்தைச் சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் விமானங்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 770 பேரை மீட்டு பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தாம்பரம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், திருவொற்றியூர், மணலி புதுநகர் உள்பட இடங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு, உணவு பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்ற பொருட்களை ஹெலிகாப்டர்கள் மூலம் வழங்கினர். தற்போது மழை வெள்ளம் வடிந்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் மருத்துவ குழு முகாமிட்டு மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறது. இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறுகையில், சென்னை தாம்பரம், முடிச்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 19,600 பேரை மீட்டுள்ளோம். பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 1,25,000 மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளோம். வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவ மருத்துவ குழு சார்பில் 14,600 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெள்ளத்தால் அதிக பாதிப்படைந்த கடலூரிலும் மருத்துவ முகாம்கள் மூலம் ராணுவத்தினர் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment