புதுக்கோட்டை: முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறுவது அரசியல் நாகரீகம் அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
நிலம் கையகப்படுத்தும் சட்டம்... கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி.யின் அகில இந்திய மாநாடு வரும் டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஆனால் இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை. எனவே தான் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து வருகிறது. அந்த சட்டம் இதுவரை 3 முறை அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது போன்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளின் தரம்.. கல்வித்துறையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம். தற்போது அரசு மற்றும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வருகிறார்கள். எனவே அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரத்துறை... இதே போன்று சுகாதாரத்துறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 1997-ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்ற சட்டத்தை உடனடியாக அரசு மறு பரீசலனை செய்ய வேண்டும். அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரததுறையில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருவமழை குறையும்... இந்தியா முழுவதும் இந்தாண்டு பருவமழை குறையும் என்று வந்த தகவலால் தற்போதிலிருந்தே உணவு தானியங்களை குறிப்பாக பருப்பு, எண்ணெய் வகைகளை பதுக்கல்காரர்கள் பதுக்க தொடங்கி விட்டனர். உடனடியாக மத்திய மாநில அரசுகள் இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஊழல் புற்றுநோய்... ஊழல் என்பது ஒரு கட்சி, தனிபட்ட நபர் சம்பந்தப்பட்டது அல்ல. ஊழல் இந்தியாவின் நிர்வாகத்தை, முன்னேற்றத்தை சீரழித்து கொண்டுள்ள புற்று நோய். எனவே இந்தியாவின் பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். மேலும் இந்த சட்டம் கடந்த கால தவறுகளையும் விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.
ராஜபக்சே... இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேனாவின் கூட்டணியிலேயே ராஜபக்சே போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை அரசியல் கட்சிகள் குறிப்பாக மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். ராஜபக்சே இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழ் இனம் முற்றிலுமாக அழிக்கப்படும்' என்றார்.
அரசியல் நாகரீகம் அல்ல.. அதனைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘உடல் நிலை குறித்து விசாரிக்கலாம். ஆனால் என்ன நோய் உள்ளது என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறுவது அரசியல் நாகரீகம் அல்ல' என்றார்.
மதுவை ஒரே நாளில் ஒழிக்க முடியாது... பின்னர், மது ஒழிப்பு தொடர்பாக அவர் கூறுகையில், ‘மதுவை ஒரே நாளில் ஒழிக்க முடியாது. சர்வ கட்சி கூட்டத்தை கூட்டி அதன் மூலம் சிறிது சிறிதாக தான் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தமிழக பா.ஜ.க. தற்போது மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆனால் அவர்கள் மோடியிடம் கூறி மத்திய அரசு இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர அவசர சட்டத்தை இயற்ற முயற்சி எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment