நாகர்கோவில்: இந்திய நாட்டு சட்டத்தை மதிக்காமல் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள 2 அணுஉலைகளையும் மூட வேண்டும் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அங்கு மேலும் 2 அணு உலைகள் அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இது அங்கு போராட்டத்தை தூண்டியுள்ளது.
அணு தீமையற்ற தமிழகம் என்ற ரெயில் பிரசார விழிப்புணர்வு பயணத்தை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் நடத்தி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரயில் பிரசார பயணம் தொடங்கியது. இதில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், முகிலன், இடிந்தகரை போராட்டக்குழு பெண்கள் உள்பட 20 பேர் பங்கேற்றனர். பிரசார பயணம் குறித்து உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. கடற்கரை ஒழுங்காற்று நியமன சட்டத்தின் படியும், காற்று மற்றும் நீர் சட்டத்தின்படியும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கூடங்குளத்தில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் கட்டப்பட்டு இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 7-ந் தேதி பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 1 மற்றும் 2-வது அணு உலை கட்டிடங்கள் சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
இந்திய நாட்டு சட்டத்தை மதிக்காமல் கட்டப்பட்டுள்ள 2 அணுஉலைகளையும் மூட வேண்டும். தமிழகத்தின் மின்சார நிலை பற்றி முதல்-அமைச்சர் கூறி உள்ள தகவல்களில் வள்ளூர், எண்ணூர் மற்றும் தனியார் மின் நிலையங்களில் இருந்தும் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலமும் தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் கூடங்குளம் அணு உலைகளை பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்துக்கு மின்சாரம் வழங்குவதில் கூடங்குளம் அணு உலைகளுக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகவே கூடங்குளத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 2 அணு உலைகளையும் மூட வேண்டும். இனி கட்ட இருக்கும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். இது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரெயில் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளோம்' என்றார்.
No comments:
Post a Comment