மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழுவினரின் 16வது கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த காலக்கெடு முடிய இன்னும் 5 தினங்களே உள்ளதால் விடிய விடிய அறிக்கை தயாரிக்கும் பணியில் சகாயம் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விசாரணை அதிகாரிகள் தங்கி இருந்த அறையில் மர்மநபர்கள் புகுந்து உளவு பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரையில் கிரானைட் முறைகேடுகள் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை 16 கட்டங்களாக விசாரணை நடந்து முடிந்துள்ளது.
மலைகள், கண்மாய்கள் மாயம் சகாயம் குழுவினரின் நேரடி ஆய்வின்போது ஏராளமான புராதன மலைகள், கண்மாய், ஊருணி மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சகாயம் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தியும் ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராகச் சொல்லி விளக்கம் கேட்டார்.
அதிகாரிகள் வாக்குமூலம் இந்த விசாரணையின்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட பல அதிகாரிகளுக்கு சகாயம் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சில அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். மதுரை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, ஆர்.டி.ஓ. செந்தில்குமாரி, கனிம வளத்துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினார் மற்றும் டாமின் அதிகாரிகள், அரசு வக்கீல்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் சகாயம் முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வாக்கு மூலங்களை சகாயம் குழுவினர் பதிவு செய்தனர். வருகிற 23ம்தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் காலகெடு விதித்துள்ளது.
ஆட்சியர் சுப்ரமணியன் அறிக்கை கடந்த ஜூலை 7ம் தேதி ஆஜராகும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு சகாயம் சம்மன் அனுப்பியிருந்தார். முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரி உரிமையாளர்கள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதில் சகாயம் அறிக்கை கேட்டிருந்தார். ஆனால் அவர் விடுமுறையில் சென்றதால் ஆஜராகவில்லை. மதுரை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினார் ஆஜராகி ஆட்சியர் அளித்ததாக 100 பக்கங்கள் அடங்கிய சீலிடப்பட்ட அறிக்கையை சகாயத்திடம் அளித்தார்.
எஸ்.பி. பாலகிருஷ்ணன் அறிக்கை அப்போதைய மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். சென்னையில் தற்போது மயிலாப்பூர் துணை கமிஷனராக உள்ள பாலகிருஷ்ணன், சில தினங்களுக்கு முன்னர் மதுரை வந்தார். காலை 11.30 மணிக்கு அவர் ஆஜராக, சகாயம் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவையும், பிற்பகலில் மதுரை டிஐஜி ஆனந்தகுமார் சோமானியையும் சந்தித்து பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலை 5.40 மணிக்கு மதுரை எஸ்பி அலுவலக எஸ்ஐ சரவணன், சகாயம் அலுவலகத்திற்கு வந்து, பாலகிருஷ்ணனின் 8 பக்க அறிக்கை அடங்கிய தபாலை கொடுத்தார். இதனை சகாயம் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அன்சுல் மிஸ்ரா அவகாசம் முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று சகாயம் கமிஷன் முன்பு ஆஜராகவில்லை. வணிகவரித் துறை ஊழியர் மூலம் அவர் அனுப்பிய கடிதத்தில், `நோட்டீசுக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்ய வரும் 21ம் தேதி வரை கால அவகாசம் தேவை என கேட்டுள்ளார்.
உளவு பார்த்த மர்மநபர் சகாயம் விசாரணைக் குழுவில் சென்னை அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானி தேவசேனா பணியாற்றி வருகிறார். இவர் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணியை கவனித்து வருகிறார். இவருக்கு மதுரை அரசு விருந்தினர் மாளிகை பழைய கட்டிடத்தில் அறை எண் 4 ஒதுக்கப்பட்டுள்ளது. இவருடன் பக்தவச்சலம் என்பவரும் தங்கியுள்ளார். இதில் பக்தவச்சலம் என்பவரின் சூட்கேஸ் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் கீழே கொட்டப்பட்டு இருந்தது. ஆனால் எந்த பொருளும் திருடு போகவில்லை.
போலீஸ் பாதுகாப்பு தேவசேனா, கிரானைட் விசாரணை அறிக்கை தொடர்பான தகவலை அறையில் வைத்திருக்கலாம் என்று கருதி மர்ம நபர் உளவு பார்த்ததாக, விசாரணைக் குழுவில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். விருந்தினர் மாளிகையில் 24 மணி நேரமும், அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். போலீஸ் பாதுகாப்பும் உள்ளது.
சகாயம் ஆய்வு ஏற்கனவே சகாயம் குழு விசாரணை நடத்தும் பூமாலை வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் விசாரணை அதிகாரிகள் தங்கி இருந்த அறையிலும் உளவு பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறையின் பின் வாசலை திறந்து உள்ளே புகுந்த நபர்கள் அறைக்குள் புகுந்து உளவு பார்த்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சகாயம், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
இறுதி அறிக்கை தயாரிப்பு இந்த நிலையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக தனது அறிக்கையை இறுதி செய்யும் பணியில் சகாயம் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் நேற்று காலையில் இருந்து விடிய, விடிய தனது அலுவலகத்தில் இருந்து அறிக்கை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். 16 கட்ட விசாரணையை முடித்துவிட்டு சென்னை திரும்பிய சகாயம், மீண்டும் வருகிற 20ம்தேதி மதுரை வந்து 17வது கட்ட விசாரணை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:
Post a Comment