சென்னை: தூய்மைக்காக ‘தூய்மை இந்தியா' இயக்கம் நடத்தப்படுவதைப் போல மதுவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தனி இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் பா.ம.க. முதல்வர் பதவி வேட்பாளர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருக்கும் மதுவின் தீமைகள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் மதுவின் தீமைகள் குறித்து விளக்குவதே இந்தக் கடிதத்தின் நோக்கம் ஆகும். மது அரக்கனின் தீமைகள் குறித்த உண்மைகளை நீங்கள் அறிந்து, அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இப்பிரச்சினையின் தீவிரம் குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்க விரும்புகிறேன்.
18 லட்சம் மரணங்கள்
மது குடிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேரும், மற்ற நோய்களால் ஆண்டுக்கு 5 முதல் 7 லட்சம் பேரும் உயிரிழக்கிறார்கள். புகை மற்றும் நோயைவிட, மது குடிப்பதனால்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழக்கிறார்கள். எனவே, மதுப்பழக்கம் என்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாகும்.


No comments:
Post a Comment