தமிழகத்தில் இதுவரை 2.64 கோடி வாக்காளர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியல் தரவு தளத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழ்நாட்டில் 5.62 கோடி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல்களில் பதிவு பெற்றுள்ளனர். வாக்காளர்களின் ஒத்துழைப்பாலும், தேர்தல் அலுவலர்களின் சீரிய பணியாலும் இதுவரை 2.64 கோடி வாக்காளர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியல் தரவு தளத்தில் இணைக்கப் பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் / இடமாற்றம் ஆகியவற்றுக்காக பெறப்பட்ட 16.40 இலட்சம் படிவங்கள் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் தீர்வு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவு அதிகாரியால் நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்ய விரும்பினால் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம். முன்னர், தேசிய அளவில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல் மற்றும் விவர உறுதிப்படுத்துதல் திட்டத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆதார் எண் மற்றும் தொடர்பு விவரங்களைக் கணக்கெடுத்தபோது அவ்விவரங்களை அளிக்க இயலாத வாக்காளர்கள் தற்போது அவ்விவரங்களைச் சமர்ப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவேட்டின்படி ஆதார் எண் வழங்கப்பட்டுள்ள, ஆனால் முந்தைய கணக்கெடுப்பின்போதும் இதுவரையும் அவ்விவரங்களை வழங்க இயலாத வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் வருவார். ஆதார் எண்ணை இணைப்பதன்மூலம் வாக்காளர் பட்டியல் தொடர்பான பல வசதிகள் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட உள்ளதால், தேர்தல் அலுவலர்களிடம் தற்போது ஆதார் எண் மற்றும் கைபேசி எண் போன்ற தொடர்பு விவரங்களை அளித்து ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்'' என்று கூறியுள்ளார்.


No comments:
Post a Comment