நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாட வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து கூறினர். இதனால் இந்த பாடங்களில் மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும் என அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மருத்துவம், பொறியியல் கனவுடன் பிளஸ்–2 தேர்வில் கஷ்டப்பட்டு பல லட்சம் மாணவ, மாணவியர் பாடங்களை படித்தனர். சில தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் மற்றும் தனியாக டியூசன் கட்டணம் என பல லட்ச ரூபாய் செலவு செய்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளனர்.
இப்படி மருத்துவம் அல்லது பொறியியல் என்ற ஒரே லட்சியத்துடன் தேர்வை எதிர் கொண்ட மாணவர்களுக்கு வேதியியல் மற்றும் உயிரியல் தேர்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் இது வரை கேட்கப்பட்டது போல் இல்லாமல் புதுமையாக இருந்ததால் பதில் அளிப்பதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் அந்த இரு பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுக்கும் மாணவர் எண்ணிக்கை குறைவதுடன் கட்–ஆப் மார்க்கும் குறையும் என கூறப்படுகிறது.
இதனால் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மெரிட்டில் படிக்க இடம் கிடைக்குமா? என்ற கவலை பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியில் எழுந்துள்ளது. கட்–ஆப் மார்க் குறைந்தால் தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி படிக்கும் நிலை ஏற்படும் என்பதால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கட்–ஆப் மார்க் குறைந்து அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பலர் தனியார் கல்லூரிகளில் சேரும் நிலை ஏற்படும் என்பதால் தனியார் கல்லூரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல இடங்கள் மாணவர்கள் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன. ஆனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தனியார் கல்லூரிகள் உள்ளன.
இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இப்போதே எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி தங்கள் கல்லூரியில் குறைவான இடங்களே உள்ளதாகவும், முன்பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும் எனவும் கூறி வருகின்றன. இது பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் கல்லூரிகளில் முன்பதிவு செய்ய தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வேளை அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் அந்த கட்டணத்தை திரும்ப பெற முடியாது. எனவே என்ன செய்வது என பல பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் சில கல்லூரிகள் இடைத்தரகர்கள் மூலம் நேரிடையாக பெற்றோர்களை சந்தித்து தங்கள் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க வலை விரிக்கின்றன.
உயர் கல்வி என்றால் மருத்துவமும், பொறியியலும் தான் என்ற எண்ணத்தை பெற்றோர் மாற்றி இன்னும் ஏராளமான படிப்புகள் உள்ளன என்பதை உணர்ந்து, தங்களது பிள்ளைகளின் விருப்பத்தையும் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உயர் கல்வி படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் தனியார் கல்லூரிகளின் மோகம் குறைந்து தரமான மாணவர்கள் உருவாகும் சூழல் ஏற்படும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment