சிறுமியை கடத்தி துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:
நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த தென்காசி ஹனீபா என்பவரின் 9 வயது மகள் சமீராவை கடத்திச் சென்று விட்டதாக ஒரு செய்தி கடந்த 9ம் தேதி பரவி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகள் சமீராவை காணவில்லை என்று தேடித் திரிந்த சிறுமியின் தாயார், அருகிலுள்ள பள்ளி வாசலின் ஒலிபெருக்கியில் மக்களுக்கு அறிவிப்பு செய்த சற்று நேரத்தில், ஒரு மொபைல் போனில் சிறுமியின் தாயாரை தொடர்பு கொண்ட நெல்லை மாவட்ட உளவுத்துறையினர், "உன் மகளை நாங்கள் தான் அழைத்துச் சென்றோம்; மகள் வருவாள்; நாங்கள் அழைத்து சென்றதாக வெளியில் சொல்லக் கூடாது; அப்படி சொன்னால் சிறுமியை கொன்று விடுவோம்'' என மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பேசி முடித்த சற்று நேரத்தில் சிறுமி சமீரா உடற்காயங்களுடன் அழுதபடியே வீட்டிற்கு வந்திருக்கிறாள். சிறுமி சமீராவிடம் விசாரணை என்ற பெயரில், "உங்கள் வீட்டுக்கு யார் யார் வருவார்கள்? யார் பணம் கொண்டு வந்து கொடுப்பார்கள்?'' என்றெல்லாம் கேட்டு போலீசார் துன்புறுத்தி உள்ளனர். காவல்துறையின் இந்த அத்து மீறல்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
இது போன்ற மனித உரிமை மீறல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடும் போக்கை காவல்துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது. முஸ்லிம் இளைஞர்களை துன்புறுத்தி வந்த காவல்துறை இப்போது பிஞ்சுக் குழந்தைகளையும் துன்புறுத்துவது; அவர்களை குற்றவாளிகளாக நடத்துவது; விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.
இப்படிப்பட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது 506/2, 323, 342, 363 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால், குற்றச் செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை பணி நீக்கமும் செய்ய வேண்டும். அதிர்ச்சி விலகாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி சமீராவிற்கு நிவாரணம் வழங்க வேண்டும். காவல்துறையினரின் அத்துமீறல்கள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் காவல்துறை ஈடுபடாது என்பதை அரசு உறுதிபடுத்த வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : இன்நேரம்
No comments:
Post a Comment