ஆம் ஆத்மி கட்சி ரூ. 2 கோடி பணத்தை நன்கொடையாக பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி வருமானவரிதுறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 14-ந் தேதி பதவியேற்கிறார். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ2 கோடி நன்கொடை வந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்திருந்தது.
அதாவது ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு 4 நிறுவனங்களிடம் இருந்து தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடி நன்கொடை வந்ததாக ஆம் ஆத்மியில் இருந்து பிரிந்து அவாம் என்ற இயக்கத்தை தொடங்கிய கரன்சிங், கோபால் கோயல் ஆகியோர் குற்றம் சாட்டினர். மேலும் அந்த நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் தருகிற அளவுக்கு பணம் கிடையாது; இது ஹவாலா பணம் என்றும் அவர்கள் கூறினர். இதன்மூலம், ஹவாலா வழிமுறையில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஆம் ஆத்மி ஈடுபட்டு இருப்பதாக மத்திய அமைச்சர்களும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேட்டுக்கொண்டிருந்தார். இருப்பினும் இது கட்சியை களங்கப்படுத்த நடக்கும் சதி என்று கூறியிருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இதுபற்றி விசாரணை நடத்த தயாரா? என்றும் சவால் விடுத்திருந்தார். தற்போது இந்த ரூ2 கோடி பணத்தை நன்கொடையாகப் பெற்றது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக வரும் 16-ந் தேதிக்குள் பதில் அளிக்க ஆம் ஆத்மி கட்சியை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் 50 நிறுவனங்களுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையை வரவேற்கிறோம்- ஆம் ஆத்மி
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான அதிஷி மர்லேனா, வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை வரவேற்கிறோம். இந்த பிரச்சனை உருவானது முதலே நாங்கள் விசாரணை நடத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தியும் வந்தோம். இதேபோல் பிற அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தினால் சிறப்பாகவும் இருக்கும். இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கவில்லை. வருமான வரித்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அதிஷி மர்லேனா கூறியுள்ளார்.
காங்கிரசுக்கும் நோட்டீஸ்
இதேபோல் டெல்லி தேர்தலுக்காக ரூ10 லட்சம் நன்கொடை பெற்றது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் கூட வெல்லவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment