தனக்கே வாக்களிப்பது போல நினைத்து ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளரான வளர்மதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீரங்கம் என் தாய் மண், என் சொந்த வீடு, தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழ்ந்து வந்த புண்ணிய பூமி. எனவேதான், என் இதய துடிப்போடு கலந்துவிட்ட உறவு ஸ்ரீரங்கத்திற்கு உண்டு.
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, வாக்காள பெருமக்களாகிய நீங்கள், என்மீது அளவில்லா அன்பு கொண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வியக்கத்தக்க வாக்கு வித்தியாசத்தை அளித்தீர்கள். என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு முறையும் நீங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு எனது மனமார்த்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சூழ்ச்சியாளர்களின் சூது மதியால், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னம் எந்த தொகுதியில், எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் அங்கே போட்டியிடுவது உங்கள் அன்பு சகோதரியாகிய நான்தான் என்று எண்ணி வாக்களிக்கும் உணர்வு கொண்டவர்கள் எனதருமைத் தமிழக வாக்காளர்கள்.
இந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களாகிய தாங்கள் அனைவரும், எனக்கே வாக்களிக்கும் எண்ணத்தோடு உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அன்புச் சகோதரி திருமதி எஸ்.வளர்மதி அவர்களுக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு அளிக்கும் வாக்காகவே கருதப்படும். எனவே, நானே போட்டியிடுவதாக கருதி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்ட நலத்திட்டப் பணிகளையும் பட்டியலிட்டுள்ள ஜெயலலிதா, எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குகளைவிட அதிகமாக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment