டெல்லி தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பேசினார். டெல்லியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித்திட்டங்கள் குறித்து அவர்களுடன் அவர் விவாதித்து, மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடினார்.
இந்த சந்திப்புகளை தொடர்ந்து அவர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவர் சந்தித்தார். அப்போது அவர் கட்டித்தழுவி, கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின்போது, பிரணாப் முகர்ஜி கெஜ்ரிவாலுக்கு இந்திய அரசியல் சட்ட புத்தகத்தையும், தான் எழுதிய எண்ணங்களும், பிரதிபலிப்புகளும் என்ற புத்தகத்தையும் அன்புப் பரிசாக வழங்கினார்.இந்த சந்திப்பு குறித்து மணிஷ் சிசோடியா கூறியதாவது:
ஜனாதிபதியுடனான கெஜ்ரிவாலின் சந்திப்பு, மரியாதை நிமித்தமானது. சிறப்பான காரணம் எதுவும் கிடையாது.ஜனாதிபதியை சந்தித்தபோது, அவரது வழிநடத்துதலுக்காகவும், ஆசிகளுக்காகவும் நன்றி தெரிவித்தோம். டெல்லி சட்டசபையை கலைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தபோது, அவரிடம் இருந்து நிறைய ஒத்துழைப்பு கிடைத்தது. (எங்கள் சந்திப்பினால்) அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். கெஜ்ரிவாலுக்கு 2 புத்தகங்களும் பரிசளித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment