வைகோவிடம் அர்விந்த் கெஜ்ரிவால் அளித்த உறுதி
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று மாலை 4.45 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘‘டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் மதிப்பை உலக அளவில் உயர்த்தி இருக்கின்றது. சாதாரண மனிதனும் அதிகார லகான்களைக் கையில் ஏந்த முடியும் என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது. உங்கள் கட்சியின் சின்னமான துடைப்பம் பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத் தாழ்வாரத்தில் நடமாட விடாமல் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டது.
இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உயர்த்துகின்ற விதத்தில், உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
உங்கள் வெற்றியை வரவேற்று நேற்றைக்கு நான் விடுத்த அறிக்கையை உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பி இருக்கின்றேன் என்றவுடன், ‘அவசியம் அதனைப் பார்க்கிறேன் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், நாம் சேர்ந்து பணி ஆற்றுவோம் என்று மூன்று முறை சொன்னார். நீங்கள் டெல்லி வரும்போது நான் சந்திக்க விரும்புகிறேன்’ என்று கூறினார்.
அதற்கு வைகோ, நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் அராஜக அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மேதா பட்கர் அம்மையார் பிப்ரவரி 24 ஆம் தேதி நடத்த இருக்கின்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் நானும் பங்கேற்க வருகிறேன். 25 ஆம் தேதியன்று உங்களைச் சந்திக்கிறேன் என்று கூறினார்.
‘மிக்க மகிழ்ச்சி. 25 ஆம் தேதி சந்திப்போம்’ என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
No comments:
Post a Comment