வாரம் ஒரு சிக்கலை உருவாக்குவது, மத்திய அரசின் தொடர் வேலைத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மற்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக இப்படிச் செய்யப்படுகிறதோ என்று எண்ண எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஸ்மிருதி ராணியின் சமஸ்க்ருத வாரம் முடிந்து, அருண் ஜேட்லியின் கறுப்புப் பண வாரம் முடிந்து, நிரஞ்சன் தேவியின் ராமர் வாரம் நடந்து கொண்டிருக்கும்போதே, இப்போது சுஷ்மா சுவராஜின் பகவத் கீதை வாரம் தொடங்கி விட்டது!
பகவத் கீதையின் 5161ஆம் ஆண்டு விழா என ஒன்று கொண்டாடி, அதில் அசோக் சிங்கால் ஆற்றியுள்ள ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ உரையில், அவர் கீதை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ‘இந்துக்களின் புனித நூலான’ கீதையை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார். அவ்விழாவில் பேசிய, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் பொன்மொழிகளை அங்கு உதிர்த்துள்ளார். “எப்போது ஒபாமாவைச் சந்தித்தபோது கீதை நூலை மோடி அவரிடம் கொடுத்தாரோ, அப்போதே அது இந்தியாவின் தேசிய நூல் என்றாகிவிட்டது. அறிவிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி,” என்கிறார் சுஷ்மா.
இனிமேல், பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது எவற்றை எல்லாம் எடுத்துச் செல்கிறார் என்று நாம் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வெளிநாட்டு அதிபருக்கு அவர் ஒரு பொம்மையைப் பரிசாகக் கொடுத்தால், அது இந்தியாவின் தேசியப் பொம்மையாகி விடும்!
போகட்டும்… அது என்ன 5161ஆம் ஆண்டு விழா? அதற்கு ஏதேனும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா? வாய்க்கு வந்த வருடத்தைச் சொல்லி வைப்பதுதான் வரலாறா? புத்தருக்கும், ஏசுவுக்கும் பிறகு எழுதப்பட்டு, இடைச்செருகலாக மகாபாரதத்திற்குள் திணிக்கப்பட்டதுதானே கீதை? வரலாற்றாசிரியர் கோசாம்பி, அம்பேத்கார் போன்றவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு ஆய்வாளர்களான எம்.விண்டர்நிட்ஸ், ருடால்ப் ஓட்டோ ஆகியோரும், குப்தர் காலத்து நூல் என்றுதானே அதனைக் குறிக்கின்றனர்.
வெளிநாட்டுக்காரர்கள் வேண்டுமென்றே இந்துக்களின் பெருமையைக் குறைப்பதற்காக அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று கூறிவிடுவார்கள். ஆனால் கீதையின் புகழை உலகமெல்லாம் பரப்பிய நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனும், பி.ஜி.திலகரும் கூட, ‘கீதை ஏசுவுக்கு முற்பட்டது, கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றுதான் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தாலும் 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. 5161 எங்கிருந்து வந்தது?
கால ஆய்வு ஒருபுறமிருக்க, இந்துக்களின் புனித நூல் என்று அசோக் சிங்கால் கூறும் கீதை எப்படி, மற்ற மதத்தினருக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புனித நூலாக, குறைந்தது பொது நூலாக ஆக முடியும்? தேசிய மொழியே இல்லாத ஒரு நாட்டிற்கு (இந்தி அலுவல் மொழி மட்டுமே), தேசிய நூலின் உடனடித் தேவை என்ன? அப்படி எல்லோருக்கும் பொதுவான என்ன தன்மை கீதையில் உள்ளது?
இந்தியாவில் இந்துக்கள்தானே 80 விழுக்காடு உள்ளனர் என்று ஒரு கதை விடுகின்றனர். அவர்கள் கூறும் அந்த இந்துக்களில் சூத்திரர்கள் எத்தனை விழுக்காடு, பஞ்சமர்கள் எத்தனை விழுக்காடு என்று கணக்குப் பார்க்க வேண்டாமா? அவர்களுக்கெல்லாம் இந்துக் கோயில்களும், இந்து வேதங்களும் பொதுவானவையாக உள்ளனவா? இந்துக்கள் அனைவரும் சம மதிப்புடையவர்களாகக் கருதப்படுகின்றனரா? இந்துக்கள் அனைவருமே ‘இரு பிறப்பாளர்களா?’
.
இந்துக்கள் என்று சொல்லப்படுவோருக்கிடையில் ஏற்றத் தாழ்வுகளை உறுதிப் படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல்தான் கீதை என்பது உலகறிந்த உண்மை! சமண, பௌத்த எழுச்சிக்குப் பின் உருவான சமத்துவ உணர்வை ஒழித்துக்கட்டப் புறப்பட்ட நூல்தான் கீதை என்பதற்கு அந்நூலில் இருந்தே அகச் சான்றுகளைக் காட்ட முடியும்.
“உணவிலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன. மழையினால் உணவு உற்பத்தி ஆகிறது. யாகத்திலிருந்து மழை வருகிறது” என்கிறது கீதை (அத் .3-14). ஆக , இந்த உலகம் உயிர் வாழ்வதற்கே யாகம்தான் காரணம். அந்த யாகத்தைச் செய்ய வல்லவர்கள் பார்ப்பனர்கள். ஆதலால் இந்த உலகம் உயிர்த்திருப்பதே அவர்களால்தான் என்று சுற்றி வளைத்துச் சொல்கிறது.
நேரடியாகவே சொல்லும் இடங்கள் 4ஆவது இயலிலும், 18ஆவது இயலிலும் உள்ளன. “குணத்திற்கும், கருமத்திற்கும் ஏற்றவாறு நான்கு வருணங்களை நான்தான் படைத்தேன் . நானே அந்தக் கருமத்தைச் செய்தவன் என்று அறிந்துகொள். ஆயினும் நான் கருமம் செய்பவனும் அல்லன், இயங்காது இருப்பவனும் அல்லன்” என்கிறார் கிருஷ்ணன் (அத் .4-13). (வேலையும் செய்வதில்லை, பேசாமலும் இருப்பதில்லை என்றால் என்ன பொருள் என்று கேட்டுப் பாருங்கள் – அதெல்லாம் தத்துவம், உங்களுக்குப் புரியாது என்று கூறி விடுவார்கள்)
இந்த இடத்திற்குக் கூட தத்துவ விற்பன்னர்கள் ஒரு விளக்கம் வைத்துள்ளனர். குணம், கருமத்திற்கு ஏற்றவாறுதானே வருணம் படைக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ண பகவான் கூறுகிறார், பிறப்பின் அடிப்படையில் இல்லையே என்று ‘வியாக்கியானம்’ செய்வார்கள். ஆனால், 18ஆவது இயலில், பிறப்பின் அடிப்படையில், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு வருணங்களின் பெயர்களையும், அவர்களுக்கான ‘கடமைகள் அல்லது தருமங்களையும்’ தீர்த்துச் சொல்லிவிடுகிறார் கிருஷ்ண ‘பகவான்’! இதோ அதனைப் படியுங்கள் (அத் .18- 41முதல் 47 வரை).
“எதிரிகளை எரிப்பவனாகிய அர்ஜுனனே! பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரகளுடைய கருமங்கள் அவர்களின் பிறப்புக்குத்
தக்கவாறு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
சாந்தமான குணம், சுய கட்டுப்பாடு, தவ வலிமை, தூய்மை, அமைதி, நேர்மை, ஞானம், நல்லறிவு, கடவுள் நம்பிக்கை ஆகியவை பிராமணனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். வீரம், துணிவு, உறுதி, திறமை, போரில் புறங் காட்டாமை, கொடைமை, இறைமை ஆகியவை சத்திரியனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். உழவு, கால்நடை பராமரிப்பு, வணிகம் ஆகியவை வைசியனாகப் பிறந்தவனது கருமங்கள் ஆகும். ஏவல் பணி செய்வது சூத்திரனாகப் பிறந்தவனது கருமம் ஆகும்.”
இதற்கு மேல் என்ன வேண்டும்? அவரவர் பிறப்புக்குத் தக்கவாறு வருணத்தையும், வேலைகளையும் பிரித்துக் கொடுத்துள்ளதாகக் கீதை சொல்கிறது. திறமைக்கோ, நேர்மைக்கோ இங்கு எந்த வேலையும் இல்லை. எல்லாம் பிறப்பினால் முடிவு செய்யப்படுகிறது. அந்த முடிவின்படி, எல்லாப் பயல்களுக்கும் ஏவல் வேலை செய்வதுதான் சூத்திரனின் கடமை. அந்தக் ‘கேடுகெட்ட’ கடமையைச் செய்யும்போது கூட, ‘கடமையைச் செய்ய வேண்டுமே தவிர அதற்குரிய பயனை எதிர்பார்க்கக் கூடாது’ என்கிறது கீதை.
இந்த நூலைத்தான் இந்தியாவின் தேசிய நூலாக ஆக்க வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க.அரசு!
சமத்துவத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள தோழர்களே சொல்லுங்கள்… கீதை யாருக்குப் புனித நூல்? இந்தியர்களுக்கா, இந்துக்களுக்கா அல்லது பார்ப்பனர்களுக்கா?
சுப வீரபாண்டியன்
No comments:
Post a Comment