தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டையின் நகல் வழங்க வேண்டுமென வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆதார் அட்டை கிடைக்காத பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக தமிழகத்தில் 64 ஆயிரத்து 500 அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கான பயிற்சி பெற்ற அரசு ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு புதிதாக வழங்கப்பட உள்ள வாக்காளர் அட்டையைப் பெற குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் அட்டையின் நகலையும் அதிகாரிகளிடம் வாக்காளர்கள் ஒப்படைக்கவேண்டும் என்பதால் ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டையை அரசுத் திட்டங்களுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து அரசும், ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தும் நிலையில் இருந்து சற்று விலகியது. இதனால் ஆதார் அட்டை கிடைக்கப் பெறாத பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் ஆதார் அட்டைகளை மக்கள் எளிதாகப் பெற மாவட்ட நிர்வாகம் பல கட்ட முகாம்களை நடத்தியது. இந்த முகாம்கள் மூலம் ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்த பொதுமக்கள் கைகளில் இன்னும் ஆதார் அட்டை கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையில் ஆதார் அடையாள அட்டை எண் இணைக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனிடையே ஆதார் அட்டை இல்லாதவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம் சென்று எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் பொதுமக்கள் கிராம அலுவலகத்துக்குச் சென்றால் அதற்கான எந்த உத்தரவும் தங்களுக்கு வரவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனராம். இது பொதுமக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து, குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் என். முருகேசன் கூறியதாவது: தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டைக்கான கணக்கெடுப்பை நடத்தி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்க வலியுறுத்தியுள்ளது.
இதனால் ஆதார் அடையாள அட்டை இல்லாத மக்கள் அலைக்கழிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆதார் அட்டை கிடைக்காத மக்களுக்கு அட்டை கிடைத்திட மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். அதற்குப் பின் ஆதார் அட்டை எண்ணை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment