பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை ஆட்சிய சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், மதரசாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரிய, ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் தர்க்காக்கள், ஆஷூர்கானாக்கள், அடக்கத்தலங்கள், தைக்காக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலைகளில் முன்னேற்றம் அடைவதற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தினை உருவாக்கி, அந்த வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, இறப்பு, கருச்சிதைவு உதவித் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் என பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சென்னையை சேர்ந்த பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் வக்பு போர்டு ஆய்வாளர்களின் பரிந்துரையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment