இலங்கையில் பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு, இந்திய தூதரகம் தலையிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி பாரம்பரியமாக மீன்பிடிக்கும் இடத்தில் மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் 5 தமிழக மீனவர்கள் மீதும் போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடரப்பட்டது. இவர்களுடன் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்டியன், ஞானப்பிரகாசம் துசாந்தன் மற்றும் கிறிஸ்துராசா கில்மெட்ராஜ் ஆகிய ஈழத் தமிழர்களும் இந்த வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டனர்.
இந்த 8 பேருக்கும்தான் கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த வழக்கில் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட 3 ஈழத் தமிழ் உறவுகளுக்கான தூக்கு தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசு மறுத்து வருகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. 3 ஈழத் தமிழர் விடுதலைக்காக நம் தமிழ் உறவுகள் யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் சிங்களப் பேரினவாத அரசோ அவர்களது கோரிக்கையை நிராகரித்து வருகிறது.
தமிழக மீனவர்கள் 5 பேரும் மீன்பிடிக்கவே சென்றனர்.. போதைப் பொருள் கடத்தவில்லை என்று இந்திய மத்திய அரசே அறிவித்துள்ளது. இந்தியப் புலனாய்வு அமைப்புகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அப்பட்டமாக பொய்யாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் சேர்க்கப்பட்ட 3 ஈழத் தமிழர்களை மட்டும் விடுவிக்காமல் தூக்கு தண்டனை கைதிகளாக இன்னமும் இலங்கை அரசு தூக்கு மேடையில் நிறுத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தைத்தான் காட்டுகிறது.
இந்த 3 அப்பாவி ஈழத் தமிழர்களுக்குமான தூக்கு தண்டனையையும் ரத்து செய்து அவர்களையும் உடனே விடுதலை செய்ய மத்திய அரசும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் சர்வேதச மனித உரிமை இயக்கங்களும் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment