ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றுள்ளது.
இன்று காலை ஜெகதாப்பட்டனம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவாக மீன்பிடிக்கப் போயுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகியுள்ளது. இதையடுத்து சக மீனவர்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மீட்புப் படகுடன் ஒரு குழு விரைந்து வந்தது.
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் 3 படகுகளுடன் 14 பேரை சிறை பிடித்து அழைத்துச் சென்றனர்.
பிடித்துச் செல்லப்பட்ட 14 பேரில் 10 பேர ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற நான்கு பேரும் ராமேஸ்வரத்தை் சேர்ந்தவர்கள். அவர்கள் சேவியர் ராஜ், ஜான்போஸ்கோ, சரவணன், களஞ்சியம் எனத் தெரிய வந்துள்ளது.
இலங்கையிலிருந்து 5 மீனவர்கள் மீண்ட நிலையில் 14 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது ராமேஸ்வரம் பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள்
இதற்கிடையே, இன்னொரு பிரிவு ராமேஸ்வரம் மீனவர்கள் பாக் ஜலசந்திப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி இங்கிருந்து போய் விடுங்கள் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி எச்சரித்துள்ளனர். இதனால் பயந்து போன தமிழக மீனவர்கள் தங்களது மீன் பிடி வலைகளை அறுத்து விட்டு வேகம் வேகமாக படகுகளுடன் திரும்பி வந்து விட்டனர்.
இலங்கைக் கடற்படையின் இந்த திடீர் குறுக்கீடு காரணமாக ரூ. 10 லட்சம் அளவுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் மீன்களை மீனவர்கள் இழந்து விட்டு திரும்பியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவர் எமிரெட் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment