தமிழக சட்டசபையின் அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அதுகுறித்து தமிழக அரசு அமைதி காத்து வந்த நிலையில் டிசம்பர் 4ம் தேதி சட்டசபை கூட்டப்படும் என்று சட்டசபை செயலாளர் இன்று மாலை அறிவித்துள்ளார்.
டிசம்பர் 4ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளையும் அது விரைவுபடுத்தியுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காவிரி டெல்டா பகுதியில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேபோல முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறது.
இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும், தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இந்தக் கோரிக்கைகள் குறித்து பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சட்டசபையை எப்போது கூட்ட வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. எங்களுக்குத் தெரியும் என்று பதிலளித்திருந்தார்.
இது ஒரு சர்ச்சையாக மாறி உலா வந்த நிலையில் இன்று சட்டசபை டிசம்பர் 4ம் தேதி கூட்டப்படுவதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வரான பின்னர் முதல் முறையாக சட்டசபை கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உறுப்பினர் பதவியை இழந்துள்ள நிலையில் சட்டசபைக் கூட்டம் முதல் முறையாக நடைபெறவிருப்பதால் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.
நிச்சயம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த சட்டசபைக் கூட்டம் ஒரு ஆசிட் டெஸ்ட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
No comments:
Post a Comment