ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்க்கட்சிகளுக்கான பொது வேட்பாளராக்கும் முயற்சிகளில் திமுக தலைவர் கருணாநிதி இறங்கியுள்ளதாக தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 8, இந்திய அரசமைப்பு சட்டத்தின் 190(3) (ஏ) மற்றும் பிரிவு 191 (1) (சி) ஆகியவற்றின் படி தீர்ப்பு வெளியான 27-09-2014ம் தேதி முதல் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் (ஸ்ரீரங்கம் தொகுதி) பதவி பறிபோனது.
இருப்பினும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சபாநாயகர் சார்பில், இம்மாதம் 8ம் தேதிதான் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்த தேவையான பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
தொகுதி காலியிடம் ஆனதில் இருந்து (27-09-14) ஆறு மாதங்களுக்குள் (மார்ச் மாதத்துக்குள்) இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கு நடுவே, எந்த தேதியில் இடைத்தேர்தல் நடத்துவது என்பதை மத்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், அரசியல் கட்சிகள் அதற்கேற்ற ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.
குறிப்பாக, திமுக இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளருக்கு எதிராக தனது வேட்பாளரை களமிறக்க திமுக முடிவு செய்துள்ளது. அதே நேரம், தனது வேட்பாளருக்கு எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவை பெற வேண்டும் என்பதிலும் திமுக உறுதியாக உள்ளது.
திமுக, பாஜக கூட்டணிகள் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்குகள் சிதறி அதிமுகவுக்கு சாதகமாகிவிடும் என்பதால் திமுக தனது வேட்பாளரை பொது வேட்பாளராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த வாரம் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், இந்த திட்டம் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. அதேபோல மதிமுகவையும் தங்களுக்கு ஆதரவு தரச் செய்யலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி நினைக்கிறார்.
ஆனால் இந்த திட்டத்திற்கு பாஜக கூட்டணி கட்சிகள் சம்மதிக்குமா, குறிப்பாக 2016 சட்டசபை பொதுத் தேர்தலில் தனது தலைமையில் ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்று அறிவித்துள்ள பாமக இந்த திட்டத்தை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment