காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையையும் ஒன்றாக வைத்துக்கொண்டு, அவர்கள் அளித்திருக்கும் வாக்குறுதிகளை ஒப்பிட்டால், இருவரும் ஒன்றுபோலவே, வெவ்வேறு வார்த்தைகளில் தங்கள் வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளார்கள் என்பது தெரியவரும்.
வேலைவாய்ப்பு; அனைவருக்கும் வீடு; கருப்பு பணத்தை கொண்டு வருவோம்; வருமானவரியை முறைப்படுத்துவோம்; எல்லாருக்கும் ஏற்புடைய, தரமான, குறைந்த செலவிலான மருத்துவ வசதி; தொழில் வளம் என எல்லாமும் ஒன்றுதான். ஆனால், இரண்டே இரண்டு அம்சங்களில் மட்டுமே பா.ஜ.க. அறிக்கை வேறுபட்டுள்ளது.
முதலாவதாக, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ராமர் கோயிலைக் கட்டுவது.இரண்டாவது, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள பிரிவு 370 சிறப்பு அதிகாரத்தை அனைவருடைய ஆலோசனையுடன் நீக்குவது.
பா.ஜ.க.வின் இந்த அறிக்கை, 16ஆவது மக்களவைத் தேர்தல் முழக்கத்தை மதவாதமா அல்லது மதச்சார்பின்மையா என்ற ஒரே தளத்துக்கு இட்டுவந்துவிட்டது.
இந்த அறிக்கை வெளியாகும் முன்பு வரையிலும், ஊழலையும் மதவாதத்தையும் ஒழிப்போம் என்று காங்கிரஸூம், ஊழலையும் வாரிசு அரசியலையும் ஒழிப்போம் என்று பா.ஜ.க.வும் பிரசாரம் செய்துவந்தன. இப்போது ஊழல் ஒரு பிரச்னையே அல்ல என்றாகிவிட்டது.
“குஜராத் போன்று இந்தியா முழுவதுக்கும் வளர்ச்சி’ என்று பா.ஜ.க. முன்வைத்த பொன்னுலக கனவை இந்த தேர்தல் அறிக்கை பின்னுக்குத் தள்ளியிருப்பதால், மோடி அலை வேகம் தணியும். எந்த கட்டாயத்தால் இத்தகைய முடிவை பா.ஜ.க. மேற்கொண்டது என்பதை எவரும் ஊகிக்க முடியும். இது காங்கிரஸூக்கு சாதகமாக மாறுவதற்கே வாய்ப்புகள் உள்ளன.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் அதிகாரம் என்பது அந்த மாநிலத்தில் காஷ்மீரிகள் தவிர வேறு யாரும் சொத்துகள் வாங்க முடியாது என்பதுதான். இந்த ஷரத்து இல்லாமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? ஊட்டி, கொடைக்கானலில் எல்லா அரசியல்வாதிகளுக்கும் நேரடியாகவும் பினாமி பெயரிலும் இருக்கின்ற பங்களாக்கள் போன்று காஷ்மீரிலும் உருவெடுத்திருக்கும். மிகப்பெரிய நிறுவனங்கள் காஷ்மீரின் இயற்கையை அழித்து பெரிய ரிசார்ட்டுகள் கட்டியிருப்பார்கள். அவ்வளவுதான்.
சிறப்பு அந்தஸ்தை நீக்குவதன் மூலம் பயன் அடையப்போவது ஊழல்-பண-அரசியல்வாதிகள்தான். வேறு யாருக்கும் குறிப்பிடும்படியான பயன் எதுவுமே கிடையாது.
ராமர் கோயில் விவகாரமும் அதைப்போன்றதே. எல்லாரும் மறக்க விரும்பும் ஒரு விவகாரமாகத்தான் அது இருக்கிறது என்பதை பா.ஜ.க. புரிந்துகொள்ளவில்லை. ராமர் கோயில் என்ற உணர்வு இந்தியா முழுவதும் ஏற்பட்டதன் காரணமும் பின்னணியும் இன்றில்லை.
1987 ஜனவரி முதல் 1988 ஜூலை வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “ராமாயணம்’ நெடுந்தொடர் இந்தியா முழுவதிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரை மாநகர வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கும் அளவுக்கு இத்தொடருக்கு ரசிகர்கள் இருந்தார்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகள் பரவலாக இல்லாத அந்நாளில், கடை வாசல்களிலும் வீட்டு வாசல்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று அத்தொடரைப் பார்த்தார்கள். அந்த அளவுக்கு ராமன் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணம், காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை ராமன் கால்பட்டதாக நிலவிய கர்ணபரம்பரைக் கதைகளும், அதன் மீது கட்டப்பட்ட கோயில்களும்தான்.
ராமாயணத் தொடரைப் பார்த்த அனைவருக்கும் ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது மட்டும்தான் தெரியும். அவர் பிறந்ததாக சொல்லப்படும் இடத்திற்கு, இந்துக்களும் முஸ்லிம்களும் சொந்தம் கொண்டாடுவது பற்றி அதுவரை 99% இந்துக்களுக்கு தெரியாது.
இந்த ராமாயணத் தொடரின் வெற்றிக்குப் பிறகுதான் பா.ஜ.க. தலைவர் அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டார். இந்திய மனங்களில் நிரம்பியிருந்த ராமாயண உணர்வை அரசியலாக மாற்றினார். அதன் உச்சபட்சமாக பாபர் மசூதி இடிப்பும் நடந்தது. அரசியல் படுவேகமாக சூடுபிடித்தது.
ஆனால் அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே நடைபெற்ற குண்டுவெடிப்புகளால், ராமர் கோயில் என்ற உணர்வே பொதுவான இந்துக்கள் மனதிலிருந்து நீங்கிப்போனது. அப்போது ராமர் கோயில் என்பது இந்துக்களின் ஆசை. இப்போது அது ஒரு “அலர்ஜி’. ராமர் கோயில் என்றாலே குண்டுவெடிப்பை மனதில் தோற்றுவிக்கும் குறியீடு!
இந்தப் புரிதல் இல்லாமல் ராமர் கோயிலை முன்வைக்கிறது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை.
தேர்தல் அறிக்கை வெளியாகும் முன்புவரை பா.ஜ.க.வுக்கு 250 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக் கணிப்பு இருந்தது. இனி அப்படியல்ல. மோடி அலைக்கு இனி வேகம் இருக்காது.
இரா. சோமசுந்தரம்
No comments:
Post a Comment