Latest News

அப்துல் கலாம் உரை : ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி துவக்கம்

ஷார்ஜாவில் நடந்து வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு பேசினார்.

ஷார்ஜாவில் 32வது சர்வதேச புத்தகக் கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி 6.11.2013 அன்று காலை துவக்கி வைத்தார்.

உலகிலேயே மிகப் பெரிய 4 புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி விளங்குகிறது. பல நாடுகளின் பதிப்பகங்கள் இந்த கண்காட்சியில் பங்குபெறுகின்றன. ஷார்ஜாவின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகம் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இலக்கியம், கலை, அறிவியல், கலாச்சாரம், தத்துவம் உள்ளிட்ட பல தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் 62 நாடுகளில் இருந்து 942 பதிப்பகங்கள் பங்குபெற்றன. மொத்தம் ஆறு லட்சம் பார்வையாளர்கள் பங்கு பெற்றனர்.

இந்த ஆண்டு 53 நாடுகளில் இருந்து 1010 பதிப்பகங்கள் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 23 அரபு நாடுகளும், 26 அரபு அல்லாத வெளிநாடுகளும் அடங்கும். இது மட்டுமின்றி முதல் முறையாக போர்சுகல், நியூசிலாந்து, ஹங்கேரி, கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகள் பங்கு பெறுகின்றன.

4,05,000 புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 20,000 புத்தகங்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

குழந்தைகளுக்கான புத்தகங்கள், அகராதிகள் என்று மொத்தம் 180 மொழிகளில் நூல்கள் இங்கே பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்.

இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவெனில், வெறும் கண்காட்சியுடன் நில்லாமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை தினமும் நடைபெறுகின்றது.

இந்த 11 நாள் கண்காட்சித் திருவிழாவில் 580 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 200 குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும், 25 சமையல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

பல்வேறு அரபு எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், புகழ்பெற்ற நூல் ஆசிரியர்களும், பிரபல நாவலாசிரியர்களும், தொலைக்காட்சி நெறியாளர்களும், ஊடகவியலாளர்களும், பல அரபு பிரபலங்களும், நடிகர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியது சிறப்பம்சம்.

இந்த கண்காட்சி வரும் 16ம் தேதி வரை நடைபெறும்.
நன்றி  http://indru.todayindia.info

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.