Latest News

துபை – மதுரை நேரடி விமான சேவை நவம்பர் 23ல் துவக்கம்


நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மதுரை- துபை விமான சேவை வரும் 23ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த நேரடி தினசரி சேவையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நவம்பர் 23ம் தேதி துவங்குகிறது.

அதிகாலை 3.50 மணிக்கு துபையிலிருந்தும், நள்ளிரவு 11.35 மணிக்கு மதுரையிலிருந்தும் இந்த விமானம் புறப்படும்.

தங்களது நீண்ட நாள் கனவான இச்சேவை துவங்கும் செய்தியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் தென் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

துபை ETA ASCON STAR குழும நிர்வாக இயக்குநர் செய்யத் எம். சலாஹூத்தீன் அறிவுறுத்தலின் படி, அமீரகத்தின் அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் தலைமையில், கடந்த சில வருடங்களாக மத்திய அரசுக்கு இவ்விமான சேவையை துவங்க வலியுறுத்தி வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னால் துபைக்கு வந்திருந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இக்குழுவினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தியதன் பயனாக இந்தியாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான விமான நிலையங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையமும் சேர்க்கப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்பட்டதனால் தான், மதுரை- வளைகுடாநாடுகளுக்கான நேரடி விமான சேவை சாத்தியமானது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன் துபை வந்திருந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங்கைச் சந்தித்தும் மதுரை- துபை நேரடி விமான சேவையைத் துவங்க கோரிக்கை வைத்தனர். சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி வந்திருந்த மத்திய இணையமைச்சர் நாராயண சாமியிடம், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் திருநெல்வேலி அமீர் கானுடன் சென்று இவ்விமான சேவை துவங்க கோரிக்கை மனு அளித்த மீரான், அமீரக அனைத்து தமிழர் சங்கங்களின் சார்பில் டெல்லியிலும் அவரைச் சந்தித்து இது சம்பந்தமாக வலியுறுத்தினார்.

தென் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ராம சுப்பு மற்றும் மாணிக் தாக்கூர் ஆகியோரும் தொடர்ந்து இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

அமீரகத்தின் அனைத்து தமிழ்ச் சங்கங்களும் தங்களது கோரிக்கையை ஏற்று மதுரை- துபை நேரடி விமான சேவையைத் துவக்க ஆவன செய்த மத்திய அரசாங்கத்திற்கும், குறிப்பாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங்கிற்கும், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

நீண்ட நாள் கழித்து விடுமுறையில் தங்களது உறவினர்களைப் பார்ப்பதற்கு தாயகம் வரும் தென் தமிழக மக்கள் இது வரை தொலை தூர விமான நிலையங்களுக்கு வந்து, ரயில், பஸ்களைப் பிடித்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். இதனால் கால விரயமும், அதிகமான பொருளாதார செலவும் ஏற்பட்டு வந்தது.

மதுரை- துபை நேரடி விமானச் சேவை மூலம் இச்சிரமங்கள் பெருமளவு குறையும். குறிப்பாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் என்று துபை சோனாப்பூர் பகுதி தொழிலாளர் முகாம்களில் வாழும் தமிழர்கள் கருத்து தெரிவித்தனர்.

விரைவிலேயே ஏர் இந்தியாவும் மதுரை- துபை சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : http://indru.todayindia.info

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.