
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வெகுவாக எழுந்துள்ளது. கொரோனா மரணம் என்பதற்கு பதிலாக நிமோனியா உள்ளிட்ட காரணங்கள் குறிப்பிடப்படுவதாகவும் சில இடங்களில் இறப்பு சான்றிதழே கொடுக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் கொரோனா மரணம் என்று குறிப்பிடாமல் இணைநோய் மரணம் என குறிப்பிடுவதாக ஸ்ரீராஜலட்சுமி என்னும் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், இணை நோய் மரணம் என்று குறிப்பிடப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தை பெற முடியவில்லை என்றும் இறப்பு சான்றிதழில் முறையான காரணம் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் இந்த புகார் வந்து கொண்டிருக்கிறது என்றும் தெளிவான பதிவு இருந்தால் தான் தொற்றை சமாளிக்கவும் நிவாரண உதவி அளிக்கவும் உதவியாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், கோரோனோ காலத்தில் இணை நோயால் உயிரிழந்தவர்களின் சான்றிதழ்களை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 28ஆம் தேதிக்குள் ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment