
புதுச்சேரியில் அமைச்சரவை அமைவதில் இழுபறி நீடிப்பதால் ஆளுங்கட்சி கூட்டணி (என்ஆர் காங் - பாஜக) எம்எல்ஏக்கள் தவிக்கின்றனர். இதனால் கரோனா காலத்தில் துறை ரீதியான பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி வென்றது. மாநில முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7-ல் பதவியேற்றார். தேர்தலில் வென்று 40 நாட்களாகியும், முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதத்தை கடந்தும் அமைச்சர்கள் பதவியேற்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்ற தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் அமைச்சரவை அமைந்து பணிகள் மும்முரமாக இருக்கும் சூழலில் புதுச்சேரியிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.
அமைச்சரவையில் எத்தனை இடங்கள் என்பதில் தொடங்கி, தொடக்கம் முதலே கடும் சிக்கல் நீடிக்கிறது. இறுதியில் பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவிகள் தர ரங்கசாமி சம்மதித்தார். இதைத்தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரப்பூர்வ கடிதத்தை கட்சித் தலைமை அனுமதி பெற்று அனுப்புவதாக பாஜக மேலிட பொறுப்பாளர் ராஜீவ்சந்திரசேகர் எம்பி தெரிவித்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வ பட்டியலை பாஜக மேலிடம் தரவில்லை.
என்ஆர் காங்கிரஸில் யாருக்கு அமைச்சர் பதவி தரலாம் என முதல்வர் ரங்கசாமி இன்னும் முடிவு செய்ததாக தெரியவில்லை.
அமாவாசை முடிந்து வளர்பிறையில் வரும் 14-ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் பதவியேற்பு விழா நடக்கும் என்று எதிர்பார்த்து, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளஎன்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் காத்திருந்தனர். ஆனால் அமைச்சரவை அமைய பாஜக மேலிடத்திலிருந்து அதி காரப்பூர்வ பட்டியல் வராததும், என்ஆர் காங்கிரஸ் தரப்பில் முடிவு ஏதும் எடுக்கப்படாததும் எம்எல்ஏக்கள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு நடத்து வதற்கான ஏற்பாடு ஏதும் நடப்பதற்கான அறிகுறியே இல்லை என்றும் புலம்புகின்றனர்.
இந்த விஷயத்தில் ஆளுங்கட்சி கூட்டணி தரப்பினரே விமர்சனத்தை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகி 40 நாட்களை கடந்த பிறகும் அமைச்சரவை அமையாததால் அரசு நிர்வாகம் தேக்கமடைந்து, துறை ரீதியான பல பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகாரி கள் தரப்பே முடிவு எடுக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சியே தொடர்கிறதோ! என்ற எண்ணம் நிலவுகிறது என்றும் பலர் கூறுகின்றனர்.
புதுச்சேரி அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருந்தாலும் சட்டப்பேரவைக்கு வரும் முதல்வர் ரங்கசாமியோ, செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து தொடர்ந்து மவுன விரதத்தையே கடைபிடிக்கிறார் பலன் கிடைக் குமா என்பது விரைவில் தெரியும்.
No comments:
Post a Comment