
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 159 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இதனால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றுள்ளது.
இந்நிலையில், கோவையை சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர் விஷ்ணு பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக எந்த நோக்கத்தோடு துவங்கப்பட்டதோ அது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்பு திசைமாறி இன்று மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.

மேலும் இளைஞர்களுக்கு எந்தவிதமான வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை. மக்கள் பணியாற்றுவதற்கு எனக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. 2021 தேர்தல் தோல்விக்கு பிறகு அவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்ய செய்வதாகவும் தெரியவில்லை. ஆனால், மாண்புமிகு அம்மா அவர்கள் 2010இல் யாருடைய சிபாரிசும் இன்றி நேரடியாக எனக்கு வழங்கிய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பதவியை நான் கனத்த இதயத்தோடு ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர் விஷ்ணு பிரபு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, திமுகவில் இணைந்து உள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment